திருவையாறு – அப்பர் தேவாரம் (3):

<– திருவையாறு

(1)
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
    உலகுக்கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
    திருவையாறகலாத செம்பொன் சோதீ
(2)
நோக்கரிய திருமேனி உடையாய் நீயே
    நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனும் காத்தாய் நீயே
    காமனையும் கண்ணழலால் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாகம் ஆர்த்தாய் நீயே
    அடியான் என்றடி என்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
    திருவையாறகலாத செம்பொன் சோதீ
(3)
கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
    கடல்வரை வான்ஆகாயம் ஆனாய் நீயே
தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே
    சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
    மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீலகண்டன் நீயே
    திருவையாறகலாத செம்பொன் சோதீ
(4)
வானுற்ற மாமலைகள் ஆனாய் நீயே
    வடகயிலை மன்னி இருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளிமழுவாள் படையாய் நீயே
    ஒளி மதியோடரவு புனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
    அடியான் என்றடி என்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல் மடவாள் பங்கன் நீயே
    திருவையாறகலாத செம்பொன் சோதீ
(5)
பெண்ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
    பெரியார்கட்கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்சம் உண்டாய் நீயே
    ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணாய் உலகெலாம் காத்தாய் நீயே
    கழற் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாள் படையாய் நீயே
    திருவையாறகலாத செம்பொன் சோதீ
(6)
உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே
    உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞானம் ஆனாய் நீயே
    கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீலகண்டன் நீயே
    திருவையாறகலாத செம்பொன் சோதீ
(7)
எல்லா உலகமும் ஆனாய் நீயே
    ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
    ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
    புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே
    திருவையாறகலாத செம்பொன் சோதீ
(8)
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே
    அளவில் பெருமை உடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
    போர்க்கோலம் கொண்டெயில் எய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
    நண்ணி அடி என்மேல் வைத்தாய் நீயே
தேவர் அறியாத தேவன் நீயே
    திருவையாறகலாத செம்பொன் சோதீ
(9)
எண்திசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
    ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
    வாரா உலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் அடிபரவ நின்றாய் நீயே
    தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரம்கூட்ட வல்லாய் நீயே
    திருவையாறகலாத செம்பொன் சோதீ
(10)
விண்டார் புரமூன்றும் எய்தாய் நீயே
    விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லும் நஞ்சுண்டாய் நீயே
    காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே
    தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
திண்தோள் விட்டெரியாடல் உகந்தாய் நீயே
    திருவையாறகலாத செம்பொன் சோதீ
(11)
ஆரும் அறியா இடத்தாய் நீயே
    ஆகாயம் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
    பெரிய முடிபத்திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே
    ஒண்தாமரையானும் மாலும் கூடித்
தேரும்அடி என்மேல் வைத்தாய் நீயே
    திருவையாறகலாத செம்பொன் சோதீ

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page