(1)
சிந்தை வாய்தல்உளான் வந்து, சீரியன்
பொந்துவார் புலால் வெண்தலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்து
அந்தி வாயதோர் பாம்பர் ஐயாறரே
(2)
பாகம் மாலை மகிழ்ந்தனர், பால்மதி
போக ஆனையின் ஈருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெய் அஞ்சாடும் ஐயாறரே
(3)
நெஞ்சம் என்பதோர் நீள்கயம் தன்னுளே
வஞ்சம் என்பதோர் வான் சுழிப்பட்டு நான்
துஞ்சும் போழ்து நின்நாமத் திருவெழுத்து
அஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே
(4)
நினைக்கும் நெஞ்சின் உள்ளார், நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி ஊட்டினார்
பனைக்கை வேழத்துரி உடல் போர்த்தவர்
அனைத்து வாய்தல் உள்ளாரும் ஐயாறரே
(5)
பரியர் நுண்ணியர், பார்த்தற்கரியவர்
அரிய பாடலர், ஆடலர், அன்றியும்
கரிய கண்டத்தர், காட்சி பிறர்க்கெலாம்
அரியர், தொண்டர்க்கெளியர் ஐயாறரே
(6)
புலரும் போதும் இலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுகளால் பணியச் சிலர்
இலரும் போதும் இலாததும் அன்றியும்
அலரும் போதும் அணியும் ஐயாறரே
(7)
பங்க மாலைக் குழலியொர் பால்நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையும் சூடும் ஐயாறரே
(8)
முன்னையாறு முயன்றெழுவீர் எலாம்
பின்னையாறு பிரியெனும் பேதைகாள்
மன்னையாறு மருவிய மாதவன்
தன்னையாறு தொழத் தவமாகுமே
(9)
ஆனையாறென ஆடுகின்றான் முடி
வானையாறு வளாயது காண்மினோ
நான்ஐயாறு புக்கேற்கவன் இன்னருள்
தேனையாறு திறந்தாலே ஒக்குமே
(10)
அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடியாள் அஞ்ச, அஞ்சலென்று
அரக்கன் ஈரைந்து வாயும் அலறவே
அரக்கினான் அடியாலும் ஐயாறனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...