திருவைகாவூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
கோழை மிடறாக, கவிகோளும் இலவாக, இசை கூடும்வகையால்
ஏழையடியார் அவர்கள் யாவைசொன சொல் மகிழும் ஈசன்இடமாம்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே
(2)
அண்டமுறு மேரு வரை, அங்கி கணை; நாண்அரவதாக எழிலார்
விண்டவர்தம் முப்புரமெரித்த விகிர்தன்அவன் விரும்பும் இடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாட அழகார்குயில் மிழற்று பொழில் வைகாவிலே
(3)
ஊனமிலராகி உயர் நற்றவ, மெய் கற்றவை உணர்ந்த அடியார்
ஞானமிக நின்றுதொழ, நாளும்அருள் செய்யவல நாதன்இடமாம்
ஆனவயல் சூழ்தரு மல் சூழியருகே, பொழில்கள்தோறும் அழகார்
வானமதியோடு மழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே
(4)
இன்னஉரு இன்னநிறம் என்றறிவதேல் அரிது, நீதிபலவும்
தன்னஉருவாம் என மிகுத்த தவநீதியொடு தான்அமர்விடம்
முன்னைவினை போய் வகையினால் முழுதுணர்ந்து முயல்கின்ற முனிவர்
மன்ன இருபோது மருவித்தொழுது சேரும்வயல் வைகாவிலே
(5)
வேதமொடு வேள்வி பலவாயின மிகுத்து, விதியாறு சமயம்
ஓதியும் உணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள் செய்ஒருவன் இடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகார்
மாதவி மணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே
(6)
நஞ்சமுது செய்த மணிகண்டன், நமையாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையிடைப் புனல்கரந்த சிவலோகன் அமர்கின்ற இடமாம்
அஞ்சுடரொர் ஆறுபதம் ஏழினிசை எண்ணரிய வண்ணம்உளவாய்
மஞ்சரொடு மாதர்பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே
(7)
நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்ல வகையால்
தோளினொடு கைகுளிரவே தொழும்அவர்க்கருள்செய் சோதி இடமாம்
நீளவளர் சோலைதொறு நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளை குதிகொள்ள மதுநாற மலர்விரியும் வயல் வைகாவிலே
(8)
கைஇருபதோடு மெய்கலங்கிட இலங்கலை எடுத்த கடியோன்
ஐயிரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன் தன்இடமாம்
கையில் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதிப் பலவிதம்
வையகமெலாம் மருவி நின்று தொழுதேத்தும் எழில் வைகாவிலே
(9)
அந்தமுதல்ஆதி பெருமான், அமரர் கோனை, அயன் மாலும்இவர்கள்
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்றருள் செய் ஈசன்இடமாம்
சிந்தைசெய்து பாடுமடியார் பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்திஅணையும் பதிநல் வைகாவிலே
(10)
ஈசன், எமை ஆளுடைய எந்தை பெருமான், இறைவன் என்றுதனையே
பேசுதல் செயா அமணர் புத்தரவர் சித்தம் அணையா அவன்இடம்
தேசமதெலாம் மருவி நின்று பரவித்திகழ நின்ற புகழோன்
வாச மலரான பல தூவிஅணையும் பதிநல் வைகாவிலே
(11)
முற்றுநமை ஆளுடைய முக்கண் முதல்வன் திருவைகாவில் அதனைச்
செற்றமலினார் சிரபுரத் தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய்
உற்றதமிழ் மாலை ஈரைந்தும் இவை வல்லவர் உருத்திரரெனப்
பெற்று அமரலோகம் மிக வாழ்வர், பிரியார்அவர் பெரும் புகழொடே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page