திருவேள்விக்குடியும் திருத்துருத்தியும் – சுந்தரர் தேவாரம்:

<– திருவேள்விக்குடி

<– திருத்துருத்தி

(1)
மூப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை, இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத்து ஊரினுமாகச் சிந்திக்கின்அல்லால்
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி, எங்கோன் அரைமேல்
ஆர்ப்பது நாகம், அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(2)
கட்டக்காட்டில் நடமாடுவர், யாவர்க்கும் காட்சியொண்ணார்
சுட்ட வெண்ணீறணிந்தாடுவர், பாடுவர், தூய நெய்யால்
வட்டக் குண்டத்தில் எரிவளர்த்தோம்பி மறை பயில்வார்
அட்டக் கொண்டுண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(3)
பேருமோர் ஆயிரம் பேருடையார், பெண்ணோடு ஆணுமல்லர்
ஊருமது ஒற்றியூர், மற்றையூர் பெற்றவா நாமறியோம்
காரும் கருங்கடல் நஞ்சமுதுண்டு கண்டம் கறுத்தார்க்கு
ஆரம் பாம்பாவது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(4)
ஏனக்கொம்பும் இள ஆமையும் பூண்டங்கோர் ஏறுமேறிக்
கானக்காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே
மானைத்தோல் ஒன்றுடுத்துப் புலித்தோல் பியற்கும்இட்டு
யானைத்தோல் போர்ப்பது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(5)
ஊட்டிக் கொண்டுண்பதோர் ஊணிலர் ஊரிடு பிச்சையல்லால்
பூட்டிக்கொண்றேற்றினை ஏறுவர், ஏறியொர் பூதம் தம்பால்
பாட்டிக் கொண்டுண்பவர், பாழிதொறும் பல பாம்பு பற்றி
ஆட்டிக் கொண்டுண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(6)
குறவனார் தம்மகள் தம்மகனார் மணவாட்டி, கொல்லை
மறவனாராய் அங்கோர் பன்றிப்பின் போவது மாயம்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதியாராய் அங்கோர் சோர்வுபடா
அறவனாராவது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(7)
பித்தரை ஒத்தொரு பெற்றியர், நற்றவை, என்னைப்பெற்ற
முற்றவை, தம்மனை தந்தைக்கு தவ்வைக்கும் தம்பிரானார்
செத்தவர்தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகி
அத்தவமாவது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(8)
உம்பரான், ஊழியான், ஆழியான், ஓங்கி மலர்உறைவான்
தம்பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்றறுப்பார்
எம்பரமல்லவர் என்னெஞ்சத்துள்ளும் இருப்பதாகி
அம்பரமாவது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(9)
இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள்புரிந்தார்
மந்திரம் ஓதுவர், மாமறை பாடுவர், மான்மறியர்
சிந்துரக் கண்ணனும் நான்முகனும் உடனாய்த் தனியே
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(10)
கூடலர் மன்னன் குல நாவலூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா
நாடவல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படுமாறு சொல்லிப்
பாடவல்லார் பரலோகத்திருப்பது பண்டமன்றே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page