(1)
ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனல் கங்கையை ஒருசடைமேல்
தாங்கினார், இடுபலி தலைகலனாக் கொண்ட தம்அடிகள்
பாங்கினால் உமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(2)
தூறுசேர் சுடலையில் சுடரெரி ஆடுவர், துளங்கொளி சேர்
நீறு சாந்தென உகந்தணிவர், வெண்பிறை புல்கு சடைமுடியார்
நாறு சாந்திளமுலை அரிவையோடு ஒருபகல் அமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(3)
மழைவளர் இளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டஎம் கண்ணுதல் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்குல் அரிவையோடு ஒருபகல் அமர்ந்த பிரான்
விழைவளர் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(4)
கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன வனமுலை அரிவையொடு ஒருபகல் அமர்ந்த பிரான்
விரும்பிடம் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(5)
வளங்கிளர் மதியமும், பொன்மலர்க் கொன்றையும் வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎம் கண்ணுதல் கபாலியார்தாம்
துளங்குநூல் மார்பினர், அரிவையொடு ஒருபகல் அமர்ந்த பிரான்
விளங்குநீர்த் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(6)
பொறியுலாம் அடுபுலி உரிவையர், வரியராப் பூண்டிலங்கும்
நெறியுலாம் பலிகொளும் நீர்மையர், சீர்மையை நினைப்பரியார்
மறியுலாம் கையினர், மங்கையொடு ஒருபகல் அமர்ந்த பிரான்
வெறியுலாம் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(7)
புரிதரு சடையினர், புலியுரி அரையினர் பொடியணிந்து
திரிதரும் இயல்பினர், திரிபுர மூன்றையும் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொடு ஒருபகல் அமர்ந்த பிரான்
விரிதரு துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(8)
நீண்டிலங்கவிரொளி நெடுமுடி அரக்கன் இந்நீள்வரையைக்
கீண்டிடந்திடுவன் என்றெழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்டநூல் மார்பினர், அரிவையொடு ஒருபகல் அமர்ந்த பிரான்
வேண்டிடம் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(9)
கரைகடல் அரவணைக் கடவுளும், தாமரை நான்முகனும்
குரைகழல் அடிதொழக் கூரெரி என நிறங்கொண்ட பிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(10)
அயமுக வெயில்நிலை அமணரும், குண்டரும், சாக்கியரும்
நயமுக உரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடுங்கண்ணியொடு ஒருபகல் அமர்ந்த பிரான்
வியன்நகர்த் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(11)
விண்ணுலாம் விரிபொழில் விரைமணல் துருத்தி வேள்விக்குடியும்
ஒண்ணுலாம் ஒலிகழல் ஆடுவார், அரிவையொடுறை பதியை
நண்ணுலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன
பண்ணுலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார் பழியிலரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...