திருவேதிகுடி – சம்பந்தர் தேவாரம்:

<– திருவேதிகுடி

(1)
நீறுவரி ஆடரவொடு ஆமைமனவு என்புநிரை பூண்பர், இடபம்
ஏறுவர், யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்த இடமாம்
தாறுவிரி பூகமலி வாழை விரைநாற, இணைவாளை மடுவில்
வேறுபிரியாது விளையாட வளமாரும் வயல் வேதிகுடியே
(2)
சொற்பிரிவிலாத மறைபாடி நடமாடுவர், தொல்ஆனை உரிவை
மற்புரி புயத்தினிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர் தொழத்
துற்பரிய நஞ்சமுதமாக முன்அயின்றவர், இயன்ற தொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர் நகர் என்பர் திருவேதிகுடியே
(3)
போழுமதி பூணரவு, கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழும் அருளாளர், இருளார் மிடறர், மாதர் இமையோர்
சூழும் இரவாளர், திருமார்பில் விரி நூலர், வரி தோலர், உடைமேல்
வேழவுரி போர்வையினர், மேவுபதி என்பர் திருவேதிகுடியே
(4)
காடர்கரி காலர்கனல் கையரனன் மெய்யருடல் செய்யர்செவியில்
தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடலுடையார்கள் அடியார்கள் மலரோடுபுனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளியான பொடிபூசி இசைமேவு திருவேதிகுடியே
(5)
சொக்கர், துணைமிக்க எயில்உக்கற முனிந்துதொழு மூவர்மகிழத்
தக்கஅருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கு நகர்தான்
கொக்கரவம் உற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசை குலாம்
மிக்கமரர் மெச்சி இனிதச்சம்இடர் போகநல்கு வேதிகுடியே
(6)
செய்ய திருமேனி மிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து
ஐயமிடும் என்றுமட மங்கையொடகம் திரியும் அண்ணல் இடமாம்
வையம்விலை மாறிடினும் ஏறுபுகழ் மிக்கிழிவு இலாத வகையார்
வெய்யமொழி தண் புலவருக்குரை செயாத அவர் வேதிகுடியே
(7)
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம்இடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலிருந்த துணைவன் தனிடமாம்
கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பிஅரு மங்கலமிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே
(8)
உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றிய ஒருத்தன் முடிதோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணன் இடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக்கமழ விண்ணிசை உலாவு திருவேதிகுடியே
(9)
பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி அங்கையனும் நேட எரியாய்த்
தேவும் இவர்அல்லர் இனி யாவரென நின்று திகழ்கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசையியல் கேள்வியது அறாத கொடையாளர் பயில்வாம்
மேவரிய செல்வ நெடுமாடம் வளர்வீதி நிகழ் வேதிகுடியே
(10)
வஞ்சமணர் தேரர், மதிகேடர், தமனத்து அறிவிலாதவர் மொழி
தஞ்சமென என்றும் உணராத அடியார் கருது சைவன் இடமாம்
அஞ்சுபுலன் வென்றறு வகைப்பொருள் தெரிந்தெழு விசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திருவேதிகுடியே
(11)
கந்தமலி தண்பொழில் நன்மாட மிடை காழிவளர் ஞானமுணர் !சம்
பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதி கழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வெய்தி, இமையோர்
அந்த உலகெய்தி அரசாளும் அதுவே சரதம் ஆணை நமதே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page