திருவேட்களம் – சம்பந்தர் தேவாரம் (1):

(1)
அந்தமும் ஆதியுமாகி அண்ணல் ஆரழல்அங்கை அமர்ந்திலங்க
மந்தமுழவம் இயம்ப, மலைமகள் காண நின்றாடிச்
சந்தமிலங்கு நகுதலை கங்கை தண்மதியம் மயலே ததும்ப
வெந்த வெண்ணீறு மெய்பூசும் வேட்கள நன்னகராரே
(2)
சடைதனைத் தாழ்தலும் ஏறமுடித்துச், சங்கவெண்தோடு சரிந்திலங்கப்
புடைதனில் பாரிடம்சூழப் போதருமாறிவர் போல்வார்
உடைதனில் நால்விரல் கோவணஆடை, உண்பதும் ஊரிடு பிச்சை, வெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்னகராரே
(3)
பூதமும் பல்கணமும் புடைசூழப், பூமியும் விண்ணும் உடன் பொருந்தச்
சீதமும் வெம்மையுமாகிச் சீரொடு நின்ற எம்செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தருவேலை, உள்ளம் கலந்து இசையாலெழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னகராரே
(4)
அரை புல்கும் ஐந்தலை ஆடலரவம் அமைய வெண்கோவணத்தோடசைத்து
வரை புல்கு மார்பிலொர்ஆமை வாங்கிஅணிந்தவர் தாம்
திரை புல்கு தெண்கடல் தண்கழியோதம் தேனலங்கானலில் வண்டு பண்செய்ய
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னகராரே
(5)
பண்ணுறு வண்டறை கொன்றைஅலங்கல், பால்புரை நீறு, வெண்ணூல் கிடந்த
பெண்ணுறு மார்பினர், பேணார் மும்மதில்எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கள் கண்ணியர், விண்ணவர் கைதொழுதேத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல் வேட்கள நன்னகராரே
(6)
கறிவளர் குன்றமெடுத்தவன் காதல் கண்கவர் ஐங்கணையோன் உடலம்
பொறிவளர் ஆரழல்உண்ணப் பொங்கிய பூதபுராணர்
மறிவளர் அங்கையர்; மங்கையொர் பங்கர்; மைஞ்ஞிற மானுரி தோலுடைஆடை
வெறிவளர் கொன்றையம் தாரார் வேட்கள நன்னகராரே
(7)
மண்பொடிக் கொண்டெரித்தோர் சுடலை, மாமலை வேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச் சேர நின்றாடி, நொய்யன செய்யல்உகந்தார்
கண்பொடி வெண்தலைஓடு கையேந்திக், காலனைக் காலால் கடிந்துகந்தார்
வெண்பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்னகராரே
(8)
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை உண்டார் அமுதம் அமரர்க்கருளிச்
சூழ்தரு பாம்பரை ஆர்த்துச், சூலமோடு ஒண் மழுவேந்தித்
தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கித், தண்மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்னகராரே
(9)
திருவொளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும், திசைமேல்அளந்த
கருவரையேந்திய மாலும் கைதொழ நின்றதும்அல்லால்
அருவரைஒல்க எடுத்த அரக்கன் நாடெழில் தோள்கள் ஆழத்தழுந்த
வெருவுற ஊன்றிய பெம்மான் வேட்கள நன்னகராரே
(10)
அத்தமண் தோய் துவரார், அமண்குண்டர், யாதுமல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவதல்லால் புறனுரை யாதொன்றும் கொள்ளேல்
முத்தன வெண்முறுவல் உமைஅஞ்ச, மூரிவல் ஆனையின் ஈருரி போர்த்த
வித்தகர் வேதமுதல்வர் வேட்கள நன்னகராரே
(11)
விண்ணியல் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடியெங்கும் விரிந்திலங்க
நண்ணிய சீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள்ஒரு பாகம்அமர்ந்து பேணிய வேட்களமேல் மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவமிலாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page