(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
சுந்தரர் தேவாரம்:
(1)
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயில்உளாயே என்ன
உழையுடையான் உள்ளிருந்துளோம் போகீர் என்றானே
(2)
இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணமென்பேன்
நடையுடையன் நம்அடியான் என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன் வெண்ணீற்றன், புலியின்தோல்
உடையுடையான் எனையுடையான் உளோம்போகீர் என்றானே
(3)
செய்வினை ஒன்றறியாதேன் திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தாயோ என்னப், பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான் உளோம்போகீர் என்றானே
(4)
கம்பமரும் கரிஉரியன், கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன் சேயிழையோடுடனாகி
நம்பி இங்கேஇருந்தாயே என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணைஎனக்கு உளோம் போகீர் என்றானே
(5)
பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடை மேல் பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா எருதேறித்
துன்னி இருபால் அடியார் தொழுதேத்த அடியேனும்
உன்னமதாய்க் கேட்டலுமே உளோம்போகீர் என்றானே
(6)
கண்ணுதலால் காமனையும் காய்ந்ததிறல், கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தாயோ என்ன
ஒண்ணுதலி பெருமான்தான் உளோம்போகீர் என்றானே
(7)
பார்நிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச் சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர் ஈங்கிருந்தீரே என்ன
ஊரரவம் அரைக்கசைத்தான் உளோம்போகீர் என்றானே
(8)
வாரிடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப் பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன் கருதுமிடம் !திருவொற்றி
யூர்இடம் கொண்டிருந்த பிரான் உளோம்போகீர் என்றானே
(9)
பொன்னவிலும் கொன்றையினாய் போய் மகிழ்க் கீழ்இருவென்று
சொன்ன எனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே, இங்கிருந்தாயோ என்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே
(10)
மான்திகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தாய் என்றுரைக்க, உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தாயோ என்ன
ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீர் என்றானே
(11)
ஏராரும் பொழில்நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட
காராரும் மிடற்றானைக் காதலித்திட்டன்பினொடும்
சீராரும் திருவாரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் தமிழ் வல்லார்க்கடையா வல்வினை தானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...