திருவெண்ணெய்நல்லூர்:

<– நடு நாடு

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சுந்தரர் தேவாரம்:

(1)
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே
(2)
நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துஉன்னைப்
பேயாய்த் திரிந்துஎய்த்தேன், பெறலாகா அருள் பெற்றேன்
வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
ஆயா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே
(3)
மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னைப்
பொன்னே மணிதானே வயிரம்மே பொருதுந்தி
மின்னார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அன்னே உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே
(4)
முடியேன், இனிப் பிறவேன், பெறின் மூவேன், பெற்றம் ஊர்தீ
கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்நீ
செடியார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அடிகேள் உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே
(5)
பாதம் பணிவார்கள் பெறும் பண்டமது பணியாய்
ஆதன் பொருளானேன், அறிவில்லேன் அருளாளா
தாதார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
ஆதீ உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே
(6)
தண்ணார் மதிசூடீ, தழல் போலும் திருமேனீ
எண்ணார் புரமூன்றும் எரி உண்ண நகை செய்தாய்
மண்ணார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அண்ணா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே
(7)
ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்
வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்
தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
ஆனாய் உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே
(8)
ஏற்றார்புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித் திரிவேனோ, செக்கர் வான்நீர்
ஏற்றாய், பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
ஆற்றாய் உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே
(9)
மழுவாள் வலன்ஏந்தீ, மறையோதீ, மங்கை பங்கா
தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன் தொழிலே
செழுவார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அழகா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே
(10)
காரூர் புனலெய்திக் கரைகல்லித் திரைக்கையால்
பாரூர் புகழெய்தித் திகழ் பன்மாமணி உந்திச்
சீரூர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்காள் அல்லேன் எனலாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page