திருவெண்காடு – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருவெண்காடு

(1)
உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்று உள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தையூர் போலும்
வெண்தாமரை மேல்  கருவண்டு யாழ்செய் வெண்காடே
(2)
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும்ஊர் போலும்
வேதத்தொலியால் கிளிசொல் பயிலும் வெண்காடே
(3)
தண் முத்தரும்பத் தடமூன்றுடையான் தனை உன்னிக்
கண் முத்தரும்பக் கழல்சேவடி கைதொழுவார்கள்
உண் முத்தரும்ப உவகை தருவான் ஊர்போலும்
வெண்முத்தருவிப் புனல் வந்தலைக்கும் வெண்காடே
(4)
நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே
கரையா வண்ணம் கண்டான் மேவும்ஊர் போலும்
விரையார் கமலத்தன்ன மருவும் வெண்காடே
(5)
பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப்போக அருளும் தலைவன்ஊர் போலும்
வெள்ளைச் சுரிசம் குலவித் திரியும் வெண்காடே
(6)
ஒளிகொள் மேனி உடையாய் உம்பராளீ என்று
அளியராகி அழுதுற்று ஊறும் அடியார்கட்கு
எளியான், அமரர்க்கரியான் வாழுமூர் போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே
(7)
கோள்வித்தனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்
மாள்வித்தவனை மகிழ்ந்தங்கு ஏத்த மாணிக்காய்
ஆள்வித்து அமரருலகம் அளிப்பான் ஊர் போலும்
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே
(8)
வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியம்சூடி என்று முப்போதும்
இளையாதேத்த இருந்தான் எந்தையூர் போலும்
விளையார் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே
(9)
கரியானோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு
உரியான், அமரர்க்கரியான் வாழுமூர் போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே
(10)
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்தேத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான், அறிவின்றி
மூடமுடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடமுடைய பெருமான் பதியாம் வெண்காடே
(11)
விடையார் கொடியான் மேவியுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடையார் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ்வல்லார்க்கு
அடையா வினைகள் அமரலோகம் ஆள்வாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page