(1)
மந்திர மறையவை வானவரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்இறை
வெந்த வெண்ணீற்றர், வெண்காடு மேவிய
அந்தமும் முதலுடை அடிகள் அல்லரே
(2)
படையுடை மழுவினர், பாய்புலித் தோலின்
உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்
விடையுடைக் கொடியர், வெண்காடு மேவிய
சடையிடைப் புனல்வைத்த சதுரர் அல்லரே
(3)
பாலொடு நெய்தயிர் பலவும் ஆடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய
ஆலமதமர்ந்த எம்அடிகள் அல்லரே
(4)
ஞாழலும் செருந்தியும், நறுமலர்ப் புன்னையும்
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
வேழமதுரித்த வெண்காடு மேவிய
யாழினது இசையுடை இறைவர் அல்லரே
(5)
பூதங்கள் பலவுடைப் புனிதர், புண்ணியர்
ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்இறை
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே
(6)
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்இறை
விண்ணமர் பொழில்கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே
(7)
நயந்தவர்க்கருள் பல நல்கி இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய
பயந்தரு மழுவுடைப் பரமர் அல்லரே
(8)
மலையுடன் எடுத்த வல்லரக்கன் நீள்முடி
தலையுடன் நெரித்தருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர், வெண்காடு மேவிய
அலையுடைப் புனல் வைத்த அடிகள் அல்லரே
(9)
ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த்
தேடவும் தெரிந்தவர் தேரகிற்கிலார்
வேடமதுடைய வெண்காடு மேவிய
ஆடலை அமர்ந்த எம்அடிகள் அல்லரே
(10)
போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
வேதியர் பரவு வெண்காடு மேவிய
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே
(11)
நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எம் சிவனுறை திருவெண்காட்டின் மேல்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...