திருவெண்காடு – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருவெண்காடு

(1)
கண்காட்டும் நுதலானும், கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும், பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும், பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே
(2)
பேயடையா பிரிவெய்தும், பிள்ளையினோடுள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர், ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
(3)
மண்ணொடுநீர் அனல் காலோடு ஆகாய மதிஇரவி
எண்ணில்வரும் இயமானன், இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே
(4)
விடமுண்ட மிடற்றண்ணல், வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை. மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டும் காட்சியதே
(5)
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநல் மறையவன் தன்
மேலடர் வெங்காலன் உயிர்விண்ட பினை நமன்தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே
(6)
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையின்உடன்
ஒண்மதிய நுதல்உமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலஓதப், பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே
(7)
சக்கரம் மாற்கீந்தானும், சலந்தரனைப் பிளந்தானும்
அக்கு அரைமேல் அசைத்தானும், அடைந்து அயிராவதம் பணிய
மிக்கு அதனுக்கருள் சுரக்கும், வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கண்உடை இறையவனே
(8)
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரநெரித்தன்றருள் செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண்டு இசைமுரலும் வெண்காடே
(9)
கள்ளார் செங்கமலத்தான், கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவம்செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே
(10)
போதியர்கள் பிண்டியர்கள், மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர் பிறிமின், அறிவுடையீர் இதுகேள்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீதிலர் என்று உணருமினே
(11)
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன்உறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடியபத்து இவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page