(1)
பண்காட்டிப் படியாய தன் பத்தர்க்குக்
கண்காட்டிக் கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட்டிப் பிறைசென்னி வைத்தான்,திரு
வெண்காட்டை அடைந்துய் மடநெஞ்சமே
(2)
கொள்ளி வெந்தழல் வீசி நின்றாடுவார்
ஒள்ளிய கணஞ்சூழ் உமை பங்கனார்
வெள்ளியன் கரியன், பசுவேறிய
தெள்ளியன் திருவெண்காடுஅடை நெஞ்சே
(3)
ஊனோக்கு இன்பம் வேண்டி உழலாதே
வானோக்கும் வழியாவது நின்மினோ
தானோக்கும் தன்அடியவர் நாவினில்
தேனோக்கும் திருவெண்காடுஅடை நெஞ்சே
(4)
பருவெண் கோட்டுப் பைங்கண் மதவேழத்தின்
உருவம் காட்டிநின்றான் உமைஅஞ்சவே
பெருவெண்காட்டிறைவன் உறையும்இடம்
திருவெண்காடு அடைந்துய் மடநெஞ்சமே
(5)
பற்றவன்; கங்கை பாம்பு மதியுடன்
உற்றவன்; சடையான்; உயர் ஞானங்கள்
கற்றவன்; கயவர் புரமோர் அம்பால்
செற்றவன் திருவெண்காடுஅடை நெஞ்சே
(6)
கூடினான் உமையாள் ஒரு பாகமாய்
வேடனாய் விசயற்கருள் செய்தவன்
சேடனார் சிவனார் சிந்தைமேய !வெண்
காடனார் அடியேஅடை நெஞ்சமே
(7)
தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடையான், கயவர் புரம்
எரித்தவன், மறை நான்கினோடு ஆறங்கம்
விரித்தவன் உறை வெண்காடுஅடை நெஞ்சே
(8)
பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள்
சிட்டன் ஆதிஎன்று சிந்தை செய்யவே
நட்ட மூர்த்தி, ஞானச்சுடராய் நின்ற
அட்டமூர்த்தி தன் வெண்காடுஅடை நெஞ்சே
(9)
ஏன வேடத்தினானும் பிரமனும்
தான் அவேடமுன் தாழ்ந்து அறிகின்றிலா
ஞான வேடன், விசயற்கருள் செயும்
கானவேடன் தன் வெண்காடுஅடை நெஞ்சே
(10)
பாலை ஆடுவர், பன்மறை ஓதுவர்
சேலையாடிய கண் உமை பங்கனார்
வேலையார் விடமுண்ட வெண்காடர்க்கு
மாலையாவது மாண்டவர் அங்கமே
(11)
இராவணம்செய மாமதி பற்று !ஐ
யிராவணம் உடையான் தனை உ ள்குமின்
இராவணன் தனை ஊன்றி அருள்செய்த
இராவணன் திருவெண்காடு அடைமினே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...