திருவூறல்:

<– தொண்டை நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
மாறில்அவுணர் அரணமவை மாயவோர் வெங்கணையால்அன்று
நீறெழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
தேறலிரும் பொழிலும், திகழ்செங்கயல் பாய்வயலும் சூழ்ந்த
ஊறல் அமர்ந்த பிரான் ஒலியார்கழல் உள்குதுமே
(2)
மத்த மதக்கரியை மலையான் மகளஞ்ச அன்று கையால்
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும்இடம்
தொத்தலரும் பொழில்சூழ் வயல் சேர்ந்தொளிர் நீலநாளும் நயனம்
ஒத்தலரும் கழனித் திருவூறலை உள்குதுமே.
(3)
ஏன மருப்பினொடும், எழில்ஆமையும் பூண்டழகார் நன்றும்
கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதும்இடம்
வானமதி தடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
ஊனம் அறுத்த பிரான் திருவூறலை உள்குதுமே
(4)
நெய்யணி மூவிலைவேல் நிறைவெண் மழுவும் அனலும்அன்று
கையணி கொள்கையினான் கடவுள்இடம் வினவில்
மையணி கண்மடவார் பலர் வந்திறைஞ்ச மன்னி நம்மை
உய்யும் வகை புரிந்தான் திருவூறலை உள்குதுமே
(5)
எண்திசையோர் மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழ அளித்தான்அவன் தாழும்இடம் வினவில்
கொண்டல்கள் தங்குபொழில் குளிர்பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை
உண்டபிரான் அமரும் திருவூறலை உள்குதுமே
(6)
….
(7)
….
(8)
கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்தெய்துதலும் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தான்இடம் வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யும் நெரியஅன்று
ஒறுத்தருள் செய்த பிரான் திருவூறலை உள்குதுமே
(9)
நீரின் மிசைத் துயின்றோன், நிறை நான்முகனும் அறியாதன்று
தேரும் வகை நிமிர்ந்தான்அவன் சேருமிடம் வினவில்
பாரின்மிசை அடியார்பலர் வந்திறைஞ்ச மகிழ்ந்தாகம்
ஊரும் அரவசைத்தான், திருவூறலை உள்குதுமே
(10)
பொன்னியல் சீவரத்தார், புளித்தட்டையர், மோட்டமணர் குண்டர்
என்னும் இவர்க்கருளா ஈசன்இடம் வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார் பொழில் சூழ்ந்தழகார், தன்னை
உன்ன வினைகெடுப்பான் திருவூறலை உள்குதுமே
(11)
கோடல் இரும்புறவில் கொடிமாடக் கொச்சையர் மன் மெச்ச
ஓடு புனல்சடை மேல் கரந்தான் திருவூறல்
நாடலரும் புகழால் மிகு ஞானசம்பந்தன் சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்திருப்பாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page