(1)
நம்பினார்க்கருள் செய்யும் அந்தணர்
நான்மறைக்கிடமாய வேள்வியுள்
செம்பொனேர் மடவாரணி பெற்ற திருமிழலை
உம்பரார் தொழுதேத்த, !மாமலை
யாளொடும் உடனே உறைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
(2)
விடங்கொள் மாமிடற்றீர், வெள்ளைச்சுருள்
ஒன்றிட்டு விட்ட காதினீர் என்று
திடங்கொள் சிந்தையினார் கலிகாக்கும் திருமிழலை
மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை
வந்திழிச்சிய வான நாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
(3)
ஊனை உற்றுயிராயினீர், ஒளி
மூன்றுமாய்த் தெளி நீரோடு ஆனஞ்சின்
தேனை ஆட்டுகந்தீர், செழுமாடத் திருமிழலை
மானை மேவிய கையினீர், மழு
ஏந்தினீர், மங்கை பாகத்தீர், விண்ணில்
ஆன வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
(4)
பந்தம் வீடிவை பண்ணினீர் !படி
றீர், மதிப்பிதிர்க் கண்ணியீர் என்று
சிந்தை செய்திருக்கும் செங்கையாளர் திருமிழலை
வந்து நாடகம் வான நாடியர்
ஆட மாலயன் ஏத்த நாள்தொறும்
அந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
(5)
புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்
ஏந்தி, வேதப்புரவித் தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர் சிறந்தேத்தும் திருமிழலைப்
பரிசினால் அடிபோற்றும் பத்தர்கள்
பாடியாடப் பரிந்து நல்கினீர்
அரிய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
(6)
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன்
ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர்
செறிந்த பூம்பொழில்தேன் துளிவீசும் திருமிழலை
நிறைந்த அந்தணர் நித்த நாள்தொறும்
நேசத்தால் உமைப் பூசிக்கும் இடம்
அறிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
(7)
பணிந்த பார்த்தன், பகீரதன், பல
பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்
திணிந்த மாடந்தொறும் செல்வம் மல்கு திருமிழலைத்
தணிந்த அந்தணர் சந்தி நாள்தொறும்
அந்தி வானிடு பூச்சிறப்பவை
அணிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
(8)
பரந்த பாரிடம் ஊரிடைப்பலி
பற்றிப் பாத்துணும் சுற்றமாயினீர்
தெரிந்த நான்மறையோர்க்கிடமாய திருமிழலை
இருந்து நீர் தமிழோடு இசைகேட்கும்
இச்சையால் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
(9)
தூய நீர் அமுதாயவாறது
சொல்லுகென்று உமை கேட்கச் சொல்லினீர்
தீயறாக் குலையார் செழுமாடத் திருமிழலை
மேய நீர் பலியேற்றதென் என்று
விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
(10)
வேத வேதியர், வேத நீதியது
ஓதுவார் விரிநீர் மிழலையுள்
ஆதி வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுகென்று
நாத கீதம் வண்டோது வார்பொழில்
நாவலூரன் வன்தொண்டன் நற்றமிழ்
பாதம் ஓதவல்லார் பரனோடு கூடுவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...