(1)
ஏரிசையும் வடஆலின் கீழிருந்தங்கு ஈரிருவர்க்கு இரங்கிநின்று
நேரிய நான்மறைப் பொருளை உரைத்தொளிசேர் நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலையாமே
(2)
பொறியரவம் அதுசுற்றிப் பொருப்பே மத்தாகப் புத்தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட கண்டத்தோன் மன்னும்கோயில்
செறிஇதழ்த் தாமரைத் தவிசில் திகழ்ந்தோங்கும் இலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல்
வெறிகதிர்ச் சாமரையிரட்ட இளஅன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே
(3)
எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள் தம் புரமூன்றும், எழிற்கணாடி
உழுந்துருளும் அளவையின் ஒள்ளெரிகொள வெஞ்சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழும்தரளம் நகைகாட்டக் கோகநகம் முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலையாமே
(4)
உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில்
வரைசேரு முகில்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர் பொன்னிதழி தர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே
(5)
காணுமாறரிய பெருமானாகிக், காலமாய்க் குணங்கள் மூன்றாய்ப்
பேணு மூன்றுருவாகிப் பேருலகம் படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்ற பர தத்துவனை, உத்தமனை, இறைஞ்சீர்என்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப போலோங்கு மிழலையாமே
(6)
அகனமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கிஞானம்
புகலுடையோர் தம்உள்ளப் புண்டரிகத்துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குள வர்க்கம் திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணம்செய்யும் மிழலையாமே
(7)
ஆறாடு சடைமுடியன், அனலாடு மலர்க்கையன், இமயப்பாவை
கூறாடு திருவுருவன், கூத்தாடும் குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகிச் செவ்வழிநல் பண்பாடும் மிழலையாமே
(8)
கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக் கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்கல் உறும்அரக்கன் பொன்முடிதோள் நெரித்தவிரல் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்தன் உடல்தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யஇழி விமானம்சேர் மிழலையாமே
(9)
செந்தளிர் மாமலரோனும், திருமாலும் ஏனமோடு அன்னமாகி
அந்தம்அடி காணாதே அவரேத்த வெளிப்பட்டோன் அமருங்கோயில்
புந்தியினால் மறைவழியே புல்பரப்பி நெய்சமிதை கையில்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகஅளிப்போர் சேரூமூர் மிழலையாமே
(10)
எண்ணிறந்த அமணர்களும், இழிதொழில்சேர் சாக்கியரும் என்றும்தன்னை
நண்ணரிய வகை மயக்கித் தன்னடியார்க்கருள் புரியும் நாதன்கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோடும் இழியும் மிழலையாமே
(11)
மின்னியலும் மணிமாட மிடை வீழிமிழலையான் விரையார் பாதம்
சென்னிமிசைக் கொண்டொழுகும் சிரபுரக்கோன், செழுமறைகள் பயிலுநாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் பரிந்துரைத்த பத்தும்ஏத்தி
இன்னிசையால் பாடவல்லார் இருநிலத்தில் ஈசனெனும் இயல்பினோரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...