(1)
அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனைஇட மகிழ்பவர்
நலமலி உருவுடை அவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினைய வலவரே
(2)
இருநிலம் இதன்மிசை எழில்பெறும் உருவினர்
கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினைய வலவரே
(3)
கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி இதழியும் இசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினைய வலவரே
(4)
மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
காடமர் கழுதுகள் அவை முழவொடு மிசை
பாடலில் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடமர் மிழலையை நினைய வலவரே
(5)
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வு செய்தவனுடை எழில்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவு செய்தவன் மிகு
நிகழ்தரு மிழலையை நினைய வலவரே
(6)
அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரி
சென்று கொள் வகைசிறு முறுவல் கொடொளி பெற
நின்றவன் மிழலையை நினைய வலவரே
(7)
கரம்பயில் கொடையினர் கடிமலர் அயனதொர்
சிரம் பயில்வற எறி சிவனுறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை அறநெறி
நிரம்பினர் மிழலையை நினைய வலவரே
(8)
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்
அரக்கனன் மணிமுடி ஒருபதும் இருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினைய வலவரே
(9)
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
வடிவுரு இயல்பினொடுலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினைய வலவரே
(10)
மன்மதன் எனஒளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை அவர்களும் மதியிலர்
துன்மதி அமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினைய வலவரே
(11)
நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விரகன மொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்று வல்லவர் உலகினில் அடியவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...