(1)
கேள்வியர், நாள்தொறும் ஓதுநல் வேதத்தர், கேடிலா
வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார்
வாழியர், தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கெலாம்
ஆழியர், தம்அடி போற்றி என்பார்கட்கு அணியரே
(2)
கல்லின்நற் பாவையோர் பாகத்தர், காதலித்தேத்திய
மெல்லினத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்
நல்லினத்தார் செய்த வேள்வி செகுத்தெழு ஞாயிற்றின்
பல்லனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே
(3)
நஞ்சினை உண்டிருள் கண்டர், பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார்
அஞ்சனக் கண்உமை பங்கினர், கங்கைஅங்காடிய
மஞ்சனச் செஞ்சடையார் என வல்வினை மாயுமே
(4)
கலையிலங்கும் மழு, கட்டங்கம், கண்டிகை, குண்டலம்
விலையிலங்கும் மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங்கும் பிறைதாழ் வடம், சூலம், தமருகம்
அலையிலங்கும் புனலேற்றவர்க்கும் அடியார்க்குமே
(5)
பிறையுறு செஞ்சடையார், விடையார், பிச்சை நச்சியே
வெறியுறு நாள்பலி தேர்ந்துழல் வீழி மிழலையார்
முறைமுறையால் இசை பாடுவார் ஆடிமுன் தொண்டர்கள்
இறையுறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே
(6)
வசையறு மாதவம் கண்டு வரிசிலை வேடனாய்
விசையனுக்கன்றருள் செய்தவர் வீழி மிழலையார்
இசை வரவிட்டியல் கேட்பித்துக், கல்ல வடமிட்டுத்
திசை தொழுதாடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே
(7)
சேடர், விண்ணோர்கட்குத் தேவர், நல் மூவிரு தொன்னூலர்
வீடர் முத்தீயர், நால் வேதத்தர் வீழி மிழலையார்
காடரங்கா உமை காண, அண்டத்திமையோர் தொழ
நாடகமாடியை ஏத்தவல்லார் வினை நாசமே
(8)
எடுத்தவன் மாமலைக் கீழ் இராவணன் வீழ்தர
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழிமிழலையார்
படுத்து வெங்காலனைப் பால் வழிபாடு செய் பாலற்குக்
கொடுத்தனர் இன்பம், கொடுப்பர், தொழக் குறைவில்லையே
(9)
திக்கமர் நான்முகன் மால் அண்டமண்டலம் தேடிட
மிக்கமர் தீத்திரளாயவர் வீழி மிழலையார்
சொக்கமதாடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும்
நக்கர்தன் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே
(10)
துற்றரையார், துவராடையர், துப்புரவொன்றிலா
வெற்றரையார் அறியாநெறி வீழி மிழலையார்
சொல்தெரியாப் பொருள் சோதிக்கப்பால் நின்ற சோதிதான்
மற்றறியா அடியார்கள் தம்சிந்தையுள் மன்னுமே
(11)
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய
ஆதியை, வாழ்பொழில் காழியுண் ஞானசம்பந்தன் ஆய்ந்து
ஓதிய ஒண்தமிழ் பத்திவை உற்றுரை செய்பவர்
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...