திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (11):

<– திருவீழிமிழலை

(1)
வெண்மதி தவழ்மதிள் மிழலையுளீர், சடை
ஒண்மதி அணிஉடையீரே
ஒண்மதி அணியுடையீர் உமை உணர்பவர்
கண்மதி மிகுவது கடனே
(2)
விதிவழி மறையவர் மிழலையுளீர், நடம்
சதிவழி வருவதொர் சதிரே
சதிவழி வருவதொர் சதிருடையீர் உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே
(3)
விரைமலி பொழிலணி மிழலையுளீர், ஒரு
வரைமிசை உறைவதும் வலதே
வரைமிசை உறைவதொர் வலதுடையீர் உமை
உரைசெயும் அவைமறை ஒலியே
(4)
விட்டெழில் பெறுபுகழ் மிழலையுளீர், கையில்
இட்டெழில் பெறுகிறது எரியே
இட்டெழில் பெறுகிறது எரியுடையீர் புரம்
அட்டது வரை சிலையாலே
(5)
வேனிகர் கண்ணியர் மிழலையுளீர், நல
பானிகர் உருவுடையீரே
பானிகர் உருவுடையீர் உமதுடன் உமை
தான்மிக உறைவது தவமே
(6)
விரைமலி பொழிலணி மிழலையுளீர், செனி
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவதொர் நெறியுடையீர், உமது
அரையுற அணிவன அரவே
(7)
விசையுறு புனல்வயல் மிழலையுளீர், அரவு
அசையுற அணிவுடையீரே
அசையுற அணிவுடையீர் உமை அறிபவர்
நசையுறு நாவினர் தாமே
(8)
விலங்கலொண் மதிளணி மிழலையுளீர், அன்று
இலங்கைமன் இடர் கெடுத்தீரே
இலங்கைமன் இடர்கெடுத்தீர் உமையேத்துவார்
புலன்களை முனிவது பொருளே
(9)
வெற்பமர் பொழிலணி மிழலையுளீர், உமை
அற்புதன் அயன்அறியானே
அற்புதன் அயன்அறியா வகை நின்றவ
நற்பதம் அறிவது நயமே
(10)
வித்தக மறையவர் மிழலையுளீர், அன்று
புத்தரொடமண் அழித்தீரே
புத்தரொடமண்அழித்தீர் உமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடையவரே
(11)
விண்பயில் பொழிலணி மிழலையுள் ஈசனைச்
சண்பையுண் ஞானசம்பந்தன்
சண்பையுண் ஞானசம்பந்தன தமிழிவை
ஒண்பொருள் உணர்வதும் உணர்வே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page