திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (9):

<– திருவீழிமிழலை

(1)
சீர்மருவு தேசினொடு தேசமலி செல்வ மறையோர்கள் பணியத்
தார்மருவு கொன்றையணி தாழ்சடையினான் அமர் சயங்கொள் பதிதான்
பார்மருவு பங்கயம் உயர்ந்தவயல் சூழ்பழன நீடஅருகே
கார்மருவு வெண்கனக மாளிகை கவின்பெருகு வீழிநகரே
(2)
பட்ட முழவிட்ட பணிலத்தினொடு பன்மறைகள் ஓதுபணிநல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய, அருள்செய்த அழல்கொள் மேனியவன் ஊர்
மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்
விட்டுலவு தென்றல்விரை நாறுபதி வேதியர்கள் வீழிநகரே
(3)
மண்ணிழி சுரர்க்கு வளமிக்க பதி, மற்றுமுள மன்னுயிர்களுக்கு
எண்ணிழிவில் இன்ப நிகழ்வெய்த, எழிலார்பொழில் இலங்கறுபதம்
பண்ணிழிவு இலாதவகை பாட, மடமஞ்ஞை நடமாட, அழகார்
விண்ணிழி விமானமுடை விண்ணவர் பிரான் மருவு வீழிநகரே
(4)
செந்தமிழர் தெய்வமறை நாவர், செழுநற்கலை தெரிந்தவரோடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன்ஊர்
கொந்தலர் பொழில், பழன வேலி, குளிர் தண்புனல் வளம் பெருகவே
வெந்திறல் விளங்கிவளர் வேதியர் விரும்புபதி வீழிநகரே
(5)
பூத பதியாகிய புராணமுனி புண்ணிய நன்மாதை மருவிப்
பேதமதிலாத வகை பாகமிக வைத்த பெருமானது இடமாம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதிலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே
(6)
மண்ணின் மறையோர் மருவு வைதிகமும், மாதவமும், மற்றும்உலகத்து
எண்ணில் பொருளாயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடமாம்
நண்ணிவரு நாவலர்கள் நாள்தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் நீள்புரிசை வீழிநகரே
(7)
மந்திரநன் மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தர விசும்பணவி அற்புதமெனப் படரும் ஆழியிருள்வாய்
மந்தரநன் மாளிகை நிலாவுமணி நீடுகதிர் விட்டஒளிபோய்
வெந்தழல் விளக்கென விரும்பினர் திருந்துபதி வீழிநகரே
(8)
ஆனவலியில் தசமுகன் தலையரங்க அணியாழி விரலால்
ஊனமர் உயர்ந்த குருதிப்புனலில் வீழ்தர உணர்ந்த பரன்ஊர்
தேனமர் திருந்துபொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிளோடு
ஆனதிரு உற்றுவளர் அந்தணர் நிறைந்தஅணி வீழிநகரே
(9)
ஏனஉருவாகி மண்இடந்த இமையோனும், எழிலன்ன உருவம்
ஆனவனும், ஆதியினோடு அந்தமறியாத அழல் மேனியவன் ஊர்
வானணவு மாமதில் மருங்கலர் நெருங்கிய வளங்கொள் பொழில்வாய்
வேனல் அமர்வெய்திட விளங்கொளியின் மிக்கபுகழ் வீழிநகரே
(10)
குண்டமணராகி ஒரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித்து
எண்திசையும் இல்லதொரு தெய்வம் உளதென்பர் அதுஎன்ன பொருளாம்
பண்டைஅயன் அன்னவர்கள் பாவனை விரும்புபரன் மேவுபதி சீர்
வெண்தரள வாள்நகைநன் மாதர்கள் விளங்குமெழில் வீழிநகரே
(11)
மத்தமலி கொன்றைவளர் வார்சடையில் வைத்தபரன் வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்புதமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம்அமர் செல்வ மலிகின்ற சிவலோக மருவி
அத்தகு குணத்தவர்களாகி அனுபோகமொடு யோகம் அவரதே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page