(1)
புள்ளித் தோல்ஆடை, பூண்பது நாகம், பூசு சாந்தம் பொடிநீறு
கொள்ளித்தீ விளக்குக் கூளிகள் கூட்டம், காளியைக் குணஞ்செய் கூத்துடையோன்
அள்ளல் கார்ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க, முள் தாழைகள்ஆனை
வெள்ளைக் கொம்பீனும் விரிபொழில் வீழிமிழலையான் என வினைகெடுமே
(2)
இசைந்தவாறு அடியார் இடுதுவல், வானோர் இழுகு சந்தனத்திளம் கமலப்
பசும்பொன் வாசிகைமேல் பரப்புவாய், கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி அலர்கயல் முதலோடு அடுத்தரிந்தெடுத்த வான் சும்மை
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினைகெடுமே
(3)
நிருத்தன், ஆறங்கன், நீற்றன், நான்மறையன், நீலமார் மிடற்றன், நெற்றிக்கண்
ஒருத்தன், மற்றெல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன், கேடிலி, உமைகோன்
திருத்தமாய் நாளும் ஆடுநீர்ப் பொய்கை, சிறியவர் அறிவினில் மிக்க
விருத்தரை அடிவீழ்ந்து இடம்புகும் வீழிமிழலையான் என வினைகெடுமே
(4)
தாங்கரும் காலம் தவிர வந்திருவர் தம்மொடும் கூடினார் அங்கம்
பாங்கினால் தரித்துப், பண்டுபோல் எல்லாம் பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள் பூங்கமுகு தெங்கிளம் கொடிமாச் செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி மிழலையான் என வினைகெடுமே
(5)
கூசுமா மயானம் கோயில், வாயில்கண் குட வயிற்றன சில பூதம்
பூசுமா சாந்தம் பூதி, மெல்லோதி பாதி, நல் பொங்கரவு அரையோன்
வாசமாம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலரணைந்தெழுந்த வான்தென்றல்
வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழிமிழலையான் என வினைகெடுமே
(6)
பாதியோர் மாதர், மாலுமோர் பாகர், பங்கயத்தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார், அமரர்கட்கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய் பூசுரர், பூமகன்அனைய
வேதியர் வேதத்தொலியறா வீழிமிழலையான் என வினைகெடுமே
(7)
தன்தவம் பெரிய சலந்தரன் உடலன் தடிந்த சக்கரம் எனக்கருள் என்று
அன்றரி வழிபட்டிழிச்சிய விமானத்திறையவன், பிறையணி சடையன்
நின்ற நாள் காலையிருந்த, நாள்மாலை கிடந்த, மண்மேல் வருகலியை
வென்ற வேதியர்கள் விழாவறா வீழிமிழலையான் என வினைகெடுமே
(8)
கடுத்த வாளரக்கன் கைலை அன்றெடுத்த கரமும் சிர நெரிந்தலற
அடுத்ததோர் விரலால் அஞ்செழுத்துரைக்க அருளினன் தடமிகு நெடுவாள்
படித்த நான்மறை கேட்டிருந்த பைங்கிளிகள் பதங்களை ஓதப்பாடிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழிமிழலையான் என வினைகெடுமே
(9)
அளவிடலுற்ற அயனொடு மாலும் அண்டமண் கெண்டியும் காணா
முளைஎரியாய மூர்த்தியைத், தீர்த்த முக்கண்எம் முதல்வனை, முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னம் தன்னிளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினைகெடுமே
(10)
கஞ்சிப் போதுடையார் கையில் கோசாரக் கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித் தேவிரிய எழுந்த நஞ்சதனை உண்டு அமரர்க்கு அமுதருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின் குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழிமிழலையான் என வினைகெடுமே
(11)
வேந்தர் வந்திறைஞ்ச, வேதியர் வீழி மிழலையுள், விண்ணிழி விமானத்து
ஏய்ந்ததன் தேவியோடு உறைகின்ற ஈசனை, எம்பெருமானைத்
தோய்ந்தநீர்த் தோணிபுரத்துறை மறையோன் தூமொழி ஞானசம்பந்தன்
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...