திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (12):

<– திருவீழிமிழலை

(1)
வேலினேர்தரு கண்ணினாள் உமைபங்கன், அங்கணன், மிழலை மாநகர்
ஆலநீழலின் மேவினான் அடிக்கன்பர் துன்பிலரே
(2)
விளங்கு நான்மறை வல்லவேதியர் மல்கு சீர்வளர் மிழலையான் அடி
உளங்கொள்வார்தமை உளங்கொள்வார், வினை ஒல்லை ஆசறுமே
(3)
விசையினோடெழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன், மிழலை மாநகர்
இசையும் ஈசனை நசையின்மேவினால் மிசைசெயா வினையே
(4)
வென்றிசேர்கொடி மூடுமாமதில் மிழலைமாநகர் மேவிநாள்தொறும்
நின்றஆதிதன் அடிநினைப்பவர் துன்பம் ஒன்றிலரே
(5)
போதகம்தனை உரிசெய்தோன், புயனேர் வரும்பொழில் மிழலை மாநகர்
ஆதரம் செய்த அடிகள் பாதமலால் ஓர்பற்றிலமே
(6)
தக்கன் வேள்வியைச் சாடினார், மணி தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்கனார் அடிதொழுவர் மேல்வினை நாள்தொறும் கெடுமே
(7)
போரணாவு முப்புரமெரித்தவன், பொழில்கள் சூழ்தரு மிழலை மாநகர்ச்
சேரும் ஈசனைச் சிந்தை செய்பவர் தீவினை கெடுமே
(8)
இரக்கமில் தொழில் அரக்கனார்உடல் நெருக்கினான், மிகு மிழலையான்அடி
சிரக்கொள் பூவென ஒருக்கினார்புகழ் பரக்கு நீள்புவியே
(9)
துன்றுபூமகன் பன்றியானவன் ஒன்றும்ஓர்கிலா மிழலையான்அடி
சென்றுபூம்புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே
(10)
புத்தர்கைச் சமண் பித்தர் பொய்க்குவை வைத்த வித்தகன், மிழலைமாநகர்
சித்தம் வைத்தவர் இத்தலத்தினுள் மெய்த் தவத்தவரே
(11)
சந்தமார்பொழில் மிழலை ஈசனைச் சண்பை ஞானசம்பந்தன் வாய்நவில்
பந்தமார் தமிழ் பத்தும் வல்லவர் பத்தராகுவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page