(1)
அரையார் விரிகோவண ஆடை
நரையார் விடையூர்தி நயந்தான்
விரையார் பொழில் வீழிம்மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே
(2)
புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் ஒருகங்கை கரந்தான்
வினைஇல்லவர் வீழிம்மிழலை
நினைவில்லவர் நெஞ்சமும் நெஞ்சே
(3)
அழ வல்லவர், ஆடியும் பாடி
எழ வல்லவர், எந்தை அடிமேல்
விழ வல்லவர், வீழிம்மிழலை
தொழ வல்லவர் நல்லவர் தொண்டே
(4)
உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் அரையார்த்த அழகன்
விரவும் பொழில் வீழிம்மிழலை
பரவும் அடியார் அடியாரே
(5)
கரிதாகிய நஞ்சணி கண்டன்
வரிதாகிய வண்டறை கொன்றை
விரிதார் பொழில் வீழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே
(6)
சடையார் பிறையான், சரிபூதப்
படையான், கொடி மேலதொர் பைங்கண்
விடையான் உறை வீழிம்மிழலை
அடைவார் அடியார் அவர்தாமே
(7)
செறியார் கழலும் சிலம்பார்க்க
நெறியார் குழலாளொடு நின்றான்
வெறியார் பொழில் வீழிம்மிழலை
அறிவார் அவலம் அறியாரே
(8)
உளையா வலிஒல்க அரக்கன்
வளையா விரலூன்றிய மைந்தன்
விளையார் வயல் வீழிம்மிழலை
அளையா வருவார் அடியாரே
(9)
மருள் செய்திருவர் மயலாக
அருள் செய்தவன், ஆரழலாகி
வெருள் செய்தவன், வீழிம்மிழலை
தெருள் செய்தவர் தீவினை தேய்வே
(10)
துளங்கும் நெறியார் அவர்தொன்மை
வளங்கொள்ளல்மின் புல்லமண் தேரை
விளங்கும் பொழில் வீழிம்மிழலை
உளங்கொள்பவர் தம்வினை ஓய்வே
(11)
நளிர் காழியுண் ஞானசம்பந்தன்
குளிரார் சடையான் அடிகூற
மிளிரார் பொழில் வீழிம்மிழலை
கிளர்பாடல் வல்லார்க்கிலை கேடே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...