திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருவீழிமிழலை

(1)
தடநிலவிய மலை நிறுவியொர் தழலுமிழ் தருபட வரவுகொடு
அடலசுரரொடு அமரர்கள் அலைகடல்கடை உழியெழு மிகுசின
விடம் இடைதரு மிடறுடையவன், விடைமிசை வரும்அவன் உறைபதி
திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே
(2)
தரையொடு திவிதல நலிதரு தகு திறலுறு சலதரனது
வரையன தலை விசையொடு வரு திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை அவனுறை பதிமிகு
திரைமலி கடல்மணல் அணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே
(3)
மலைமகள்தனை இகழ்வதுசெய்த மதியறு சிறுமனவனது உயர்
தலையினொடு, அழலுருவன் கரமற முனிவு செய்தவன் உறைபதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களை தருகொடை பயில்பவர் மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில் வளர் திருமிழலையே
(4)
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒருகணை செல நிறுவிய
பெருவலியினன், நலமலிதரு கரன், உரமிகு பிணம் அமர்வன
இருளிடை அடையுறவொடு நடவிசை உறுபரன் இனிதுறை பதி
தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே
(5)
அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடும் அடியிணை இருவர்கள்
பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன்உறைவிடம், ஒளி
மணிபொரு வரு மரகத நிலமலி புனல் அணைதரு வயலணி
திணிபொழில் தருமணமது நுகர் அறுபதமுரல் திருமிழலையே
(6)
வசையறு வலி வனசர உருவதுகொடு, நினைவரு தவமுயல்
விசையன திறல் மலைமகள்அறிவுறு திறலமர் மிடல் கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரும் அவனுறை பதியது, மிகுதரு
திசையினில் மலர் குலவிய செறிபொழில் மலிதரு திருமிழலையே
(7)
நலமலி தரு மறைமொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிரது கொளவரு
சலமலி தரு மறலி தனுயிர் கெடஉதை செய்தவன் உறைபதி
திலகமிதென உலகுகள்புகழ் தருபொழில் அணிதிரு மிழலையே
(8)
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவது செய்த தசமுகனது
கரம் இருபது நெரிதர விரல் நிறுவிய கழலடி உடையவன்
வரன்முறை உலகவை தருமலர் வளர் மறையவன் வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதி திருமிழலையே
(9)
அயனொடும், எழிலமர் மலர்மகள் மகிழ்கணன் அளவிடல் ஒழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர்படி உருவது வர, வரன்முறை
சயசய எனமிகு துதிசெய வெளிஉருவிய அவன் உறைபதி
செய நிலவிய மதில் மதியது தவழ்தர உயர்திரு மிழலையே
(10)
இகழுருவொடு பறிதலை கொடும் இழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ் துவருடை உடல் பொதிபவர் கெட, அடியவர் மிக அருளிய
புகழுடை இறையுறை பதி, புனல்அணி கடல் புடை தழுவிய புவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே
(11)
சினமலி கரியுரி செய்தசிவன் உறைதரு திருமிழலையை, மிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ் விரகனதுரை ஒருபதும்
மனமகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மகள் இசைதர இருநிலனிடை இனிதமர்வரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page