திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (13):

<– திருவீழிமிழலை

(1)
துன்றுகொன்றை நம் சடையதே, தூயகண்ட நஞ்சடையதே
கன்றின் மான்இடக் கையதே, கல்லின் மான் இடக்கையதே
என்றும் ஏறுவது இடவமே, என்னிடைப் பலி இடவமே
நின்றதும் மிழலையுள்ளுமே, நீரெனைச் சிறிதும் உள்ளுமே
(2)
ஓதி வாயதும் மறைகளே, உரைப்பதும் பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே, பணிகின்றேன் மிகும்ஆதையே
காது சேர் கனங்குழையரே, காதலார் கனம் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா, மிழலை மேவிய வேதியா
(3)
பாடுகின்ற பண் தாரமே, பத்தரன்ன பண்டாரமே
சூடுகின்றது மத்தமே, தொழுத என்னை உன்மத்தமே
நீடு செய்வதும் தக்கதே, நின்னரைத் திகழ்ந்தது அக்கதே
நாடுசேர் மிழலையூருமே, நாக நஞ்சழலை ஊருமே
(4)
கட்டுகின்ற கழல்நாகமே, காய்ந்ததும் மதனன் ஆகமே
இட்டமாவது இசை பாடலே, இசைந்த நூலினமர் பாடலே
கொட்டுவான் முழவம் வாணனே, குலாயசீர் மிழலை வாணனே
நட்டமாடுவது சந்தியே, நான்உய்தற்கு இரவு சந்தியே
(5)
ஓவிலாது இடும் கரணமே, உன்னும் என்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் ஆணையே, அருளின் நின்ன பொற்தாள் ஆணையே
பாவியாது உரை மெய்யிலே, பயின்ற நின்னடி மெய்யிலே
மேவினான்விறல் கண்ணனே, மிழலை மேய முக்கண்ணனே
(6)
வாய்ந்த மேனி எரி வண்ணமே, மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே, கடுநடம் செயும் காலனே
போந்தது எம்மிடை இரவிலே, உம்மிடைக் கள்வம் இரவிலே
வேய்ந்ததும் மிழலை என்பதே, விரும்பியே அணிவது என்பதே
(7)
அப்பியன்ற கண் ஐயனுமே, அமரர் கோமகனும் அயனுமே
ஒப்பில் நின்றமரர் தருவதே, ஒண்கையால் அமரர்தரு அதே
மெய்ப்பயின்றவர் இருக்கையே, மிழலையூர் உமது இருக்கையே
செப்புமின் எருது மேயுமே, சேர்வுமக்கு எருதும் ஏயுமே
(8)
தானவக் குலம் விளக்கியே, தாரகைச் செலவு இளக்கியே
வான்அடர்த்த கயிலாயமே, வந்து மேவு கயிலாயமே
தானெடுத்த வல்லரக்கனே, தடமுடித் திரள் அரக்கனே
மேல்நடைச் செல விருப்பனே, மிழலை நற்பதி விருப்பனே
(9)
காய மிக்கதொரு பன்றியே, கலந்த நின்னவுருபு அன்றியே
ஏய இப்புவி மயங்கவே, இருவர் தாம் மன மயங்கவே
தூய மெய்த்திரள் அகண்டனே, தோன்றி நின்ற மணிகண்டனே
மேய இத்துயில் விலக்கணா, மிழலை மேவிய இலக்கணா
(10)
கஞ்சியைக் குலவு கையரே, கலக்கமார் அமணர் கையரே
அஞ்ச வாதிலருள் செய்யநீ, அணைந்திடும் பரிசு செய்யநீ
வஞ்சனே வரவும் வல்லையே, மதித்தெனைச் சிறிதும் வல்லையே
எஞ்சலின்றி வருஇத்தகா, மிழலைசேரும் விறல் வித்தகா
(11)
மேய செஞ்சடையின் அப்பனே, மிழலை மேவிய என்அப்பனே
ஏயுமா செய இருப்பனே, இசைந்தவா செய விருப்பனே
காயவர்க்க அசம்பந்தனே, காழி ஞானசம்பந்தனே
வாயுரைத்த தமிழ் பத்துமே, வல்லவர்க்கும் இவை பத்துமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page