(1)
என்பொனே, இமையோர் தொழு பைங்கழல்
நன்பொனே, நலம் தீங்கறிவொன்றிலேன்
செம்பொனே, திருவீழிமிழலையுள்
அன்பனே, அடியேனைக் குறிக்கொளே
(2)
கண்ணினால் களிகூரக் கையால் தொழுது
எண்ணுமாறறியாத இளைப்பேன் தனை
விண்ணுளார் தொழும் வீழிமிழலையுள்
அண்ணலே அடியேனைக் குறிக்கொளே
(3)
ஞாலமே, விசும்பே, நலம் தீமையே
காலமே, கருத்தே, கருத்தால் தொழும்
சீலமே, திருவீழிமிழலையுள்
கோலமே, அடியேனைக் குறிக்கொளே
(4)
முத்தனே, முதல்வா, முகிழும் முளை
ஒத்தனே, ஒருவா உருவாகிய
சித்தனே, திருவீழிமிழலையுள்
அத்தனே, அடியேனைக் குறிக்கொளே
(5)
கருவனே, கருவாய்த் தெளிவார்க்கெலாம்
ஒருவனே, உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற
திருவனே, திருவீழிமிழலையுள்
குருவனே, அடியேனைக் குறிக்கொளே
(6)
காத்தனே பொழில் ஏழையும் காதலால்
ஆத்தனே அமரர்க்கு, அயன் தன் தலை
சேர்த்தனே, திருவீழிமிழலையுள்
கூத்தனே, அடியேனைக் குறிக்கொளே
(7)
நீதி வானவர் நித்தல் நியமம்செய்து
ஓதி வானவரும் உணராததோர்
வேதியா, விகிர்தா, திருவீழியுள்
ஆதியே, அடியேனைக் குறிக்கொளே
(8)
பழகி நின்னடி சூடிய பாலனைக்
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய
அழகனே, அணி வீழிமிழலையுள்
குழகனே, அடியேனைக் குறிக்கொளே
(9)
அண்ட வானவர் கூடிக் கடைந்த நஞ்சு
உண்ட வானவனே, உணர்வொன்றிலேன்
விண்ட வான்பொழில் வீழிமிழலையுள்
கொண்டனே, அடியேனைக் குறிக்கொளே
(10)
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற்றான் உரம்
வருத்தினாய், வஞ்சனேன் மனம் மன்னிய
திருத்தனே, திருவீழிமிழலையுள்
அருத்தனே, அடியேனைக் குறிக்கொளே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...