(1)
பூதத்தின் படையர், பாம்பின் பூணினர், பூண நூலர்
சீதத்தில் பொலிந்த திங்கள் கொழுந்தர், நஞ்சழுந்து கண்டர்
கீதத்தில் பொலிந்த ஓசைக் கேள்வியர், வேள்வியாளர்
வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்தனாரே
(2)
காலையில் கதிர்செய் மேனி, கங்குலில் கறுத்த கண்டர்
மாலையில் மதியம் சேர்ந்த மகுடத்தர், மதுவும் பாலும்
ஆலையில் பாகும் போல அண்ணித்திட்ட அடியார்க்கென்றும்
வேலையின் அமுதர் வீழிமிழலையுள் விகிர்தனாரே
(3)
வருந்தின நெருநல் இன்றாய் வழங்கின நாளர், ஆல்கீழ்
இருந்து நன்பொருள்கள் நால்வர்க்கியம்பினர், இருவரோடும்
பொருந்தினர், பிரிந்து தம்பால் பொய்யராம் அவர்கட்கென்றும்
விருந்தினர், திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே
(4)
நிலையிலா ஊர் மூன்றொன்ற, நெருப்பரி காற்றம்பாகச்
சிலையும் நாணதுவும் நாகம் கொண்டவர், தேவர் தங்கள்
தலையினால் தரித்த என்பும், தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர், வீழிமிழலையுள் விகிர்தனாரே
சிலையும் நாணதுவும் நாகம் கொண்டவர், தேவர் தங்கள்
தலையினால் தரித்த என்பும், தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர், வீழிமிழலையுள் விகிர்தனாரே
(5)
மறையிடைப் பொருளர், மொட்டின் மலர்வழி வாசத் தேனர்
கறவிடைப் பாலில் நெய்யர், கரும்பினில் கட்டியாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப் பிணையல்சேர் சடையுள் நீரர்
விறகிடைத் தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே
(6)
எண்ணகத்தில்லை அல்லர், உளர்அல்லர், இமவான் பெற்ற
பெண்ணகத்தரையர், காற்றில் பெருவலி இருவராகி
மண்ணகத்தைவர், நீரில் நால்வர், தீயதனில் மூவர்
விண்ணகத்தொருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே
பெண்ணகத்தரையர், காற்றில் பெருவலி இருவராகி
மண்ணகத்தைவர், நீரில் நால்வர், தீயதனில் மூவர்
விண்ணகத்தொருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே
(7)
சந்தணி கொங்கையாள்ஓர் பங்கினார், சாம வேதர்
எந்தையும் எந்தை தந்தை தந்தையுமாய ஈசர்
அந்தியோடுதயம் அந்தணாளர் ஆனெய்யால் வேட்கும்
வெந்தழல் உருவர், வீழிமிழலையுள் விகிர்தனாரே
(8)
நீற்றினை நிறையப் பூசி, நித்தல்ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று குறையக் கண்நிறைய இட்ட
ஆற்றலுக்காழி நல்கி, அவன் கொணர்ந்திழிச்சும் கோயில்
வீற்றிருந்தளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே
(9)
சித்தி செய்பவர்கட்கெல்லாம் சேர்விடம், சென்று கூடப்
பத்தி செய்பவர்கள் பாவம் பறிப்பவர், இறப்பிலாளர்
முத்திசெய் பவளமேனி, முதிரொளி நீல கண்டர்
வித்தினில் முளையர் வீழி மிழலையுள் விகிர்தனாரே
(10)
தருக்கின அரக்கன் தேரூர் சாரதி தடைநிலாது
பொருப்பினை எடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங்கலறி மீண்டு நினைந்தடி பரவத் தம்வாள்
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...