(1)
கயிலாய மலையுள்ளார், காரோணத்தார்
கந்த மாதனத்துளார், காளத்தியார்
மயிலாடுதுறையுளார், மாகாளத்தார்
வக்கரையார், சக்கரம் மாற்கீந்தார், வாய்ந்த
அயில்வாய சூலமும் காபாலமும்
அமரும் திருக்கரத்தார், ஆனேறேறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழிமிழலையே மேவினாரே
(2)
பூதியணி பொன் நிறத்தர், பூணநூலர்
பொங்கரவர், சங்கரர், வெண்குழையோர் காதர்
கேதிசரம் மேவினார், கேதாரத்தார்
கெடில வடஅதிகை வீரட்டத்தார்
மாதுயரம் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
மழபாடி மேய மழுவாளனார்
வேதிகுடி உள்ளார், மீயச்சூரார்
வீழிமிழலையே மேவினாரே
(3)
அண்ணாமலை அமர்ந்தார், ஆரூர் உள்ளார்
அளப்பூரார், அந்தணர்கள் மாடக் கோயில்
உண்ணாழிகையார், உமையாளோடும்
இமையோர் பெருமானார், ஒற்றியூரார்
பெண்ணாகடத்துப் பெருந்தூங்கானை
மாடத்தார், கூடத்தார்; பேராவூரார்
விண்ணோர்கள் எல்லாம் விரும்பியேத்த
வீழிமிழலையே மேவினாரே
(4)
வெண்காட்டார், செங்காட்டங்குடியார், வெண்ணி
நன்னகரார், வேட்களத்தார், வேத நாவார்
பண்காட்டும் வண்டார் பழனத்துள்ளார்
பராய்த்துறையார், சிராப்பள்ளி உள்ளார், பண்டோர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
உரித்துரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி அஞ்சக் காட்டி
வீழிமிழலையே மேவினாரே
(5)
புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்
புலியூர்ச் சிற்றம்பலத்தே நடமாடுவார்
உடைசூழ்ந்த புலித்தோலர், கலிக்கச்சி !மேற்
றளியுளார், குளிர்சோலை ஏகம்பத்தார்
கடைசூழ்ந்து பலிதேரும் கங்காளனார்
கழுமலத்தார், செழுமலர்த்தார்க் குழலியோடும்
விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ
வீழிமிழலையே மேவினாரே
(6)
பெரும்புலியூர் விரும்பினார், பெரும்பாழிய்யார்
பெரும்பற்றப் புலியூர், மூலட்டானத்தார்
இரும்புதலார், இரும்பூளை உள்ளார், ஏரார்
இன்னம்பரார், ஈங்கோய் மலையார், இன்சொல்
கரும்பனையாள் உமையோடும் கருகாவூரார்
கருப்பறியலூரார், கரவீரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவியேத்த
வீழிமிழலையே மேவினாரே
(7)
மறைக்காட்டார், வலிவலத்தார், வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார், மாகாளத்தார்
கறைக்காட்டும் கண்டனார், காபாலிய்யார்
கற்குடியார், விற்குடியார், கானப்பேரார்
பறைக்காட்டும் குழிவிழிகண் பல்பேய் சூழப்
பழையனூர் ஆலங்காட்டடிகள், பண்டோர்
மிறைக்காட்டும் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழிமிழலையே மேவினாரே
(8)
அஞ்சைக்களத்துள்ளார், ஐயாற்றுள்ளார்
ஆரூரார், பேரூரார், அழுந்தூர் உள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார், தக்களூரார்
சாந்தை அயவந்தி தங்கினார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்
நாகேச்சரத்துள்ளார், நாரையூரார்
வெஞ்சொல் சமண்சிறையில் என்னை மீட்டார்
வீழிமிழலையே மேவினாரே
(9)
கொண்டல்உள்ளார், கொண்டீச்சரத்தின் உள்ளார்
கோவலூர் வீரட்டம் கோயில் கொண்டார்
தண்டலையார், தலையாலங்காட்டில் உள்ளார்
தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கினார்தாம்
வண்டலொடு மணல்கொணரும் பொன்னி நன்னீர்
வலஞ்சுழியார் வைகலின்மேல் மாடத்துள்ளார்
வெண்தலை கைக்கொண்ட விகிர்த வேடர்
வீழிமிழலையே மேவினாரே
(10)
அரிச்சந்திரத்துள்ளார், அம்பர் உள்ளார்
அரிபிரமர் இந்திரர்க்கும் அரியரானார்
புரிச்சந்திரத்துள்ளார், போகத்துள்ளார்
பொருப்பரையன் மகளோடு விருப்பராகி
எரிச்சந்தி வேட்கும் இடத்தார், ஏம
கூடத்தார், பாடத்தேன் இசையார் கீதர்
விரிச்சங்கை எரிக்கொண்டங்காடும் வேடர்
வீழிமிழலையே மேவினாரே
(11)
புன்கூரார், புறம்பயத்தார், புத்தூர் உள்ளார்
பூவணத்தார், புலிவலத்தார், வலியின் மிக்க
தன்கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான்
தலைகளொடு மலைகளன்ன தாளும் தோளும்
பொன்கூரும் கழலடியோர் விரலால் ஊன்றிப்
பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்
மின்கூரும் சடைமுடியார், விடையின் பாகர்
வீழிமிழலையே மேவினாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...