(1)
போரானை ஈருரிவைப் போர்வையானைப்
புலியதளே உடையாடை போற்றினானைப்
பாரானை மதியானைப் பகல்ஆனானைப்
பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீயானானை
நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானைத், திருவீழிமிழலையானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
(2)
சவந்தாங்கு மயானத்துச் சாம்பல்என்பு
தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னைப்
பவந்தாங்கு பாசுபத வேடத்தானைப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வியெல்லாம்
கவர்ந்தானைக், கச்சி ஏகம்பன் தன்னைக்
கழலடைந்தான் மேல்கறுத்த காலன் வீழச்
சிவந்தானைத், திருவீழிமிழலையானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
(3)
அன்றாலின் கீழிருந்தங்கு அறம் சொன்னானை
அகத்தியனை உகப்பானை, அயன்மால் தேட
நின்றானைக், கிடந்த கடல் நஞ்சுண்டானை
நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள்ஐந்தும்
வென்றானை, மீயச்சூர் மேவினானை
மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்றுச்
சென்றானைத், திருவீழிமிழலையானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
(4)
தூயானைச் சுடர்ப்பவளச் சோதியானைத்
தோன்றிய எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற
தாயானைச், சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னைச்
சங்கரனைச், சந்தோக சாமம் ஓதும்
வாயானை, மந்திரிப்பார் மனத்துளானை
வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச்
சேயானைத், திருவீழிமிழலையானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
(5)
நற்றவத்தின் நல்லானைத், தீதாய் வந்த
நஞ்சமுது செய்தானை, அமுதமுண்ட
மற்றமரர் உலந்தாலும் உலவாதானை
வருகாலம் செல்காலம் வந்த காலம்
உற்றவத்தை உணர்ந்தாரும் உணரலாகா
ஒருசுடரை, இருவிசும்பின் ஊர்மூன்றொன்றச்
செற்றவனைத், திருவீழிமிழலையானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றார
(6)
மைவான மிடற்றானை, அவ்வான் மின்போல்
வளர்சடைமேல் மதியானை, மழையாய் எங்கும்
பெய்வானைப், பிச்சாடல் ஆடுவானைப்
பிலவாய பேய்க்கணங்கள் ஆர்க்கச் சூலம்
பொய்வானைப், பொய்யிலா மெய்யன் தன்னைப்
பூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை
செய்வானைத், திருவீழிமிழலையானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
(7)
மிக்கானைக், குறைந்தடைந்தார் மேவலானை
வெவ்வேறாய் இருமூன்று சமயமாகிப்
புக்கானை, எப்பொருட்கும் பொதுவானானைப்
பொன்னுலகத்தவர் போற்றும் பொருளுக்கெல்லாம்
தக்கானைத், தானன்றி வேறொன்றில்லாத்
தத்துவனைத், தடவரையை நடுவு செய்த
திக்கானைத், திருவீழிமிழலையானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
(8)
வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் தன்னை
வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை
ஊனவனை உயிரவனை, ஒருநாள் பார்த்தன்
உயர்தவத்தின் நிலையறியல் உற்றுச் சென்ற
கானவனைக், கயிலாயம் மேவினானைக்
கங்கைசேர் சடையானைக், கலந்தார்க்கென்றும்
தேனவனைத், திருவீழிமிழலையானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
(9)
பரத்தானை, இப்பக்கம் பலஆனானைப்
பசுபதியைப், பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை, வணங்குவார் மனத்துளானை
மாருதமால் எரிமூன்றும் வாய் அம்பீர்க்காம்
சரத்தானைச், சரத்தையும்தன் தாள்கீழ் வைத்த
தபோதனனைச், சடா மகுடத்தணிந்த பைங்கண்
சிரத்தானைத், திருவீழிமிழலையானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
(10)
அறுத்தானை அயன்தலைகள் அஞ்சிலொன்றை
அஞ்சாதே வரையெடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை, எழுநரம்பின் இசை கேட்டானை
இந்துவினைத் தேய்த்தானை, இரவி தன் பல்
பறித்தானைப், பகீரதற்காய் வானோர் வேண்டப்
பரந்திழியும் புனல்கங்கை பனிபோலாங்குச்
செறித்தானைத், திருவீழிமிழலையானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...