(1)
கண்ணவன் காண், கண்ணொளிசேர் காட்சியான் காண்
கந்திருவம் பாட்டிசையில் காட்டுகின்ற
பண்ணவன் காண், பண்ணவற்றின் திறலானான் காண்
பழமாகிச் சுவையாகிப் பயக்கின்றான் காண்
மண்ணவன் காண், தீயவன் காண், நீரானான் காண்
வந்தலைக்கும் மாருதன் காண், மழைமேகம் சேர்
விண்ணவன் காண், விண்ணவர்க்கு மேலானான் காண்
விண்ணிழி தண் வீழிமிழலையானே
(2)
ஆலைப் படுகரும்பின் சாறு போல
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான் காண்
சீலமுடை அடியார் சிந்தையான் காண்
திரிபுர மூன்றெரிபடுத்த சிலையினான் காண்
பாலினொடு தயிர்நறு நெய்யாடினான் காண்
பண்டரங்க வேடன் காண், பலி தேர்வான் காண்
வேலை விடமுண்ட மிடற்றினான் காண்
விண்ணிழி தண் வீழிமிழலையானே
(3)
தண்மையொடு வெம்மைதான் ஆயினான் காண்
சக்கரம் புள் பாகற்கருள் செய்தான் காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபாலி காண்
காமனுடல் வேவித்த கண்ணினான் காண்
எண்ணில் சமண் தீர்த்தென்னை ஆட்கொண்டான் காண்
இருவர்க்கெரியாய் அருளினான் காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண்
விண்ணிழி தண் வீழிமிழலையானே
(4)
காதிசைந்த சங்கக் குழையினான் காண்
கனக மலையனைய காட்சியான் காண்
மாதிசைந்த மாதவமும் சோதித்தான் காண்
வல்லேன வெள்ளெயிற்று ஆபரணத்தான் காண்
ஆதியன் காண், அண்டத்துக்கப்பாலான் காண்
ஐந்தலை மாநாகம் நாண் ஆக்கினான் காண்
வேதியன் காண், வேதவிதி காட்டினான் காண்
விண்ணிழி தண் வீழிமிழலையானே
(5)
நெய்யினொடு பால்இளநீர் ஆடினான் காண்
நித்த மணவாளன் என நிற்கின்றான் காண்
கையில் மழுவாளொடு மானேந்தினான் காண்
காலனுயிர் காலால் கழிவித்தான் காண்
செய்ய திருமேனி வெண்ணீற்றினான் காண்
செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினான் காண்
வெய்ய கனல் விளையாட்டாடினான் காண்
விண்ணிழி தண் வீழிமிழலையானே
(6)
கண்துஞ்சும் கருநெடுமால் ஆழி வேண்டிக்
கண்ணிடந்து சூட்டக் கண்டருளுவான் காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
வான்கங்கை சடைக்கரந்த மாதேவன் காண்
பண்தங்கு மொழிமடவாள் பாகத்தான் காண்
பரமன்காண், பரமேட்டி ஆயினான் காண்
வெண்திங்கள் அரவொடு செஞ்சடை வைத்தான் காண்
விண்ணிழி தண் வீழிமிழலையானே
(7)
கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி
கரு மாலுக்கருள் செய்த கருணையான் காண்
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித்தான் காண்
வேடுவனாய்ப் போர்பொருது காட்டினான் காண்
தற்பரமாம் தற்பரமாய் நிற்கின்றான் காண்
சதாசிவன் காண்; தன்னொப்பார் இல்லாதான் காண்
வெற்பரையன் பாவை விருப்புளான் காண்
விண்ணிழி தண் வீழிமிழலையானே
(8)
மெய்த்தவன் காண், மெய்த்தவத்தில் நிற்பார்க்கெல்லாம்
விருப்பிலா இருப்புமன வினையர்க்கென்றும்
பொய்த்தவன் காண், புத்தன் மறவாதோடி
எறிசல்லி புதுமலர்கள் ஆக்கினான் காண்
உய்த்தவன் காண், உயர் கதிக்கே உள்கினாரை
உலகனைத்தும் ஒளித்தளித்திட்டு உய்யச் செய்யும்
வித்தகன் காண், வித்தகர் தாம் விரும்பியேத்தும்
விண்ணிழி தண் வீழிமிழலையானே
(9)
சந்திரனைத் திருவடியால் தளர்வித்தான் காண்
தக்கனையும் முனிந்து எச்சன் தலைகொண்டான் காண்
இந்திரனைத் தோள் முரிவித்தருள் செய்தான் காண்
ஈசன் காண், நேசன் காண், நினைவோர்க்கெல்லாம்
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண்
மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரிசுடராய் ஓங்கினான் காண்
விண்ணிழி தண் வீழிமிழலையானே
(10)
ஈங்கைப் பேரீம வனத்திருக்கின்றான் காண்
எம்மான் காண், கைம்மாவின் உரிபோர்த்தான் காண்
ஓங்கு மலைக்கரையன் தன் பாவையோடும்
ஓருருவாய் நின்றான் காண், ஓங்காரன் காண்
கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணியான் காண்
கொல்லேறு வெல்கொடி மேல் கூட்டினான் காண்
வேங்கைவரிப் புலித்தோல் மேலாடையான் காண்
விண்ணிழி தண்வீழி மிழலையானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...