(1)
மானேறு கரமுடைய வரதர் போலும்
மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்
கானேறு கரிகதற உரித்தார் போலும்
கட்டங்கம் கொடிதுடி கைக்கொண்டார் போலும்
தேனேறு திருஇதழித் தாரார் போலும்
திருவீழிமிழலை அமர் செல்வர் போலும்
ஆனேறதேறும் அழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
(2)
சமரம்மிகு சலந்தரன்போர் வேண்டினானைச்
சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும்
நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்
நாரணனை இடப்பாகத்தடைத்தார் போலும்
குமரனையும் மகனாக உடையார் போலும்
குளிர்வீழி மிழலைஅமர் குழகர் போலும்
அமரர்கள்பின் அமுதுண நஞ்சுண்டார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
(3)
நீறணிந்த திருமேனி நிமலர் போலும்
நேமி நெடுமாற்கருளிச் செய்தார் போலும்
ஏறணிந்த கொடியுடைஎம் இறைவர் போலும்
எயில்மூன்றும் எரிசரத்தால் எய்தார் போலும்
வேறணிந்த கோலமுடை வேடர் போலும்
வியன் வீழிமிழலைஉறை விகிர்தர் போலும்
ஆறணிந்த சடா மகுடத்தழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
(4)
கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும்
கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
திசைமுகன் தன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்தி தலையறுத்தார் போலும்
வியன் வீழிமிழலை இடங்கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்கம் ஆனார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
(5)
துன்னத்தின் கோவணம் ஓன்றுடையார் போலும்
சுடர்மூன்றும் சோதியுமாய்த் தூயார் போலும்
பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்
பூதகணம் புடைசூழ வருவார் போலும்
மின்னொத்த செஞ்சடை வெண்பிறையார் போலும்
வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும்
அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
(6)
மாலாலும் அறிவரிய வரதர் போலும்
மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்
நாலாய மறைக்கிறைவர் ஆனார் போலும்
நாம எழுத்தஞ்சாய நம்பர் போலும்
வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்
வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்
ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
(7)
பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்
பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்
மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்
வடகயிலை மலையுடைய மணாளர் போலும்
செஞ்சடைக்கண் வெண்பிறை கொண்டணிந்தார் போலும்
திருவீழிமிழலை அமர் சிவனார் போலும்
அஞ்சடக்கும் அடியவர்கட்கணியார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
(8)
குண்டரொடு பிரித்தெனை ஆட்கொண்டார் போலும்
குடமூக்கில் இடமாக்கிக் கொண்டார் போலும்
புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்
புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்
வெண்தலையில் பலிகொண்ட விகிர்தர் போலும்
வியன் வீழிமிழலை நகருடையார் போலும்
அண்டத்துப் புறத்தப்பால்ஆனார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
(9)
முத்தனைய முகிழ்முறுவல் உடையார் போலும்
மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்
எத்தனையும் பத்தி செய்வார்க்கினியார் போலும்
இருநான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்
வியன் வீழிமிழலைஅமர் விகிர்தர் போலும்
அத்தனொடும் அம்மை எனக்கானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
(10)
கரியுரி செய்துமை வெருவக் கண்டார் போலும்
கங்கையையும் செஞ்சடைமேல் கரந்தார் போலும்
எரியதொரு கைத்தரித்த இறைவர் போலும்
ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்
விரிகதிரோர் இருவரைமுன் வெகுண்டார் போலும்
வியன் வீழிமிழலைஅமர் விமலர் போலும்
அரிபிரமர் துதிசெய நின்றளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
(11)
கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக்
கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலும்
குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக்
கூத்தாட வல்ல குழகர் போலும்
வெயிலாய சோதி விளக்கானார் போலும்
வியன் வீழிமிழலைஅமர் விகிர்தர் போலும்
அயிலாரும் மூவிலைவேல் படையார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...