திருவீழிமிழலை – அப்பர் தேவாரம் (8):

<– திருவீழிமிழலை

(1)
வான்சொட்டச் சொட்ட நின்றட்டும் வளர்மதியோடு அயலே
தேன்சொட்டச் சொட்ட நின்றட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர், மணிநீர் மிழலையுளீர்
நான்சட்ட உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே
(2)
அந்தமும் ஆதியுமாகி நின்றீர், அண்டம் எண்திசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்றீர், பசு ஏற்றுகந்தீர்
வெந்தழலோம்பும் மிழலையுள்ளீர், என்னைத் தென்திசைக்கே
உந்திடும் போது மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே
(3)
அலைக்கின்ற நீர்நிலம் காற்றனல் அம்பரமாகி நின்றீர்
கலைக்கன்று சேரும் கரத்தீர், கலைப்பொருளாகி நின்றீர்
விலக்கின்றி நல்கு மிழலையுளீர், மெய்யில் கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே
(4)
தீத்தொழிலான் தலைதீயிலிட்டுச் செய்த வேள்வி செற்றீர்
பேய்த் தொழிலாட்டியைப் பெற்றுடையீர், பிடித்துத் திரியும்
வேய்த் தொழிலாளர் மிழலையுள்ளீர், விக்கி அஞ்செழுத்தும்
ஓத்தொழிந்தும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே
(5)
தோள்பட்ட நாகமும் சூலமும் சுற்றியும் பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தேன், இறக்க நமன்தமர் தம்
கோட்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே
(6)
கண்டியில் பட்ட கழுத்துடையீர், கரி காட்டிலிட்ட
பண்டியில் பட்ட பரிகலத்தீர், பதி வீழி கொண்டீர்
உண்டியில், பட்டினி நோயில், உறக்கத்தில், உம்மை ஐவர்
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே
(7)
தோற்றம் கண்டான் சிரமொன்று கொண்டீர், தூய வெள்ளெருதொன்று
ஏற்றம் கொண்டீர், எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர்
சீற்றம் கொண்டென்மேல் சிவந்ததொர் பாசத்தால் வீசிய!வெங்
கூற்றம் கண்டும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே
(8)
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடிச் சொக்கம் பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடையீர், படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை விட்டீர், மிழலையுள்ளீர் பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே
(9)
பிள்ளையில் பட்ட பிறைமுடியீர், மறையோத வல்லீர்
வெள்ளையில் பட்டதொர் நீற்றீர், விரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையில் பட்டு ஐவர் நக்கரைப்பிக்க நமன்தமர் தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே
(10)
கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென்றிறச் செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர், விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page