திருவிளநகர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
ஒளிரிளம் பிறை சென்னி மேல் உடையர், கோவண ஆடையர்
குளிரிளம் மழை தவழ்பொழில் கோல நீர்மல்கு காவிரி
நளிரிளம் புனல் வார்துறை நங்கை கங்கையை நண்ணினார்
மிளிரிளம் பொறி அரவினார் மேயது விளநகரதே
(2)
அக்கரவணிகலன் என, அதனொடார்த்ததொர் ஆமைபூண்டு
உக்கவர் சுடு நீறணிந்து, ஒளிமல்கு புனல் காவிரிப்
புக்கவர், துயர் கெடுகெனப் பூசு வெண்பொடி மேவிய
மிக்கவர் வழிபாடுசெய் விளநகர் அவர் மேயதே
(3)
வாளிசேர் அடங்கார் மதிதொலைய நூறிய, வம்பின் வேய்த்
தோளி பாகம் அமர்ந்தவர், உயர்ந்த தொல்கடல் நஞ்சுடன்
காளம் மல்கிய கண்டத்தர், கதிர்விரி சுடர் முடியினர்
மீளி ஏறுகந்தேறினார் மேயது விளநகரதே
(4)
கால் விளங்கெரி கழலினார், கையிலங்கிய வேலினார்
நூல் விளங்கிய மார்பினார், நோயிலார், பிறப்பும் இலார்
மால் விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மேல்விளங்கு வெண்பிறையினார் மேயது விளநகரதே
(5)
பன்னினார் மறைபாடினார்; பாயசீர்ப் பழங்காவிரித்
துன்னு தண்துறை முன்னினார, தூநெறி பெறுவாரெனச்
சென்னி திங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்
மின்னு பொன்புரி நூலினார் மேயது விளநகரதே
(6)
தேவரும் அமரர்களும், திசைகள் மேலுள தெய்வமும்
யாவரும் அறியாததோர் அமைதியால் தழலுருவினார்
மூவருமவர் என்னவும், முதல்வருமிவர் என்னவும்
மேவரும் பொருளாயினார் மேயது விளநகரதே
(7)
சொல்தரு மறை பாடினார், சுடர்விடும் சடை முடியினார்
கல் தருவடம் கையினார், காவிரித் துறை காட்டினார்
மல்தரு திரள் தோளினார், மாசில் வெண்பொடிப் பூசினார்
வில்தரு மணி மிடறினார் மேயது விளநகரதே
(8)
படர்தரும் சடை முடியினார், பைங்கழலடி பரவுவார்
அடர்தரும் பிணி கெடுகென அருளுவார், அரவரையினார்
விடர் தரும் மணி மிடறினார், மின்னு பொன்புரி நூலினார்
மிடறரும் படை மழுவினார் மேயது விள நகரதே
(9)
கையிலங்கிய வேலினார், தோலினார், கரி காலினார்
பையிலங்கு அரவல்குலாள் பாகமாகிய பரமனார்
மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மெய்யிலங்கு வெண்ணீற்றினார் மேயது விளநகரதே
(10)
உள்ளதன் தனைக் காண்பன் கீழ் என்ற மாமணி வண்ணனும்
உள்ளதன் தனைக் காண்பன் மேல் என்ற மாமலர் அண்ணலும்
உள்ளதன் தனைக் கண்டிலார், ஒளியார் தரும் சடை முடியின்மேல்
உள்ளதன் தனைக் கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே
(11)
மென்சிறை வண்டு யாழ்முரல் விளநகர்த் துறை மேவிய
நன்பிறை நுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன் சீர்
இன்புறு தமிழால் சொன்ன ஏத்துவார் வினைநீங்கிப் போய்த்
துன்புறு துயரம் இலர் தூநெறி பெறுவார்களே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page