திருவிடைமருதூர் – சுந்தரர் தேவாரம்:

<– திருவிடைமருதூர்

(1)
கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால்
    கைப்பர் பாழ்புக, மற்றுஅது போலப்
பழுது நானுழன்று உள் தடுமாறிப்
    படுசுழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீஇருந்தென் செய்தி மனனே
    அங்கணா அரனே என மாட்டா
இழுதையேனுக்கொர் உய்வகை அருளாய்
    இடைமருதுறை எந்தை பிரானே
(2)
நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
    நன்றியில் வினையே துணிந்தெய்த்தேன்
அரைத்த மஞ்சளதாவதை அறிந்தேன்
    அஞ்சினேன் நமனார்அவர் தம்மை
உரைப்பன் நானுன சேவடி சேர
    உணரும் வாழ்க்கையை ஒன்றறியாத
இரைப்பனேனுக்கோர் உய்வகை அருளாய்
    இடைமருதுறை எந்தை பிரானே
(3)
புல்நுனைப் பனி வெங்கதிர் கண்டால்
    போலும் வாழ்க்கை பொருளிலை, நாளும்
என்னெனக்கினி இற்றைக்கு நாளை
    என்றிருந்து இடருற்றனன் எந்தாய்
முன்னமே உன் சேவடி சேரா
    மூர்க்கனாகிக் கழிந்தன காலம்
இன்னம் எந்தனுக்குய்வகை அருளாய்
    இடைமருதுறை எந்தை பிரானே
(4)
முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
    மூர்க்கனாகிக் கழிந்தன காலம்
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்
    சிறுச்சிறிதே இரப்பார்கட்கு ஒன்றீயேன்
அந்தி வெண்பிறை சூடும் எம்மானே
    ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீஎனக்கு உய்வகை அருளாய்
    இடைமருதுறை எந்தை பிரானே
(5)
அழிப்பர் ஐவர் புரவுடையார்கள்
    ஐவரும் புரஆசற ஆண்டு
கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்
    கடைமுறை உனக்கே பொறையானேன்
விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை
    வேண்டேன் மானுட வாழ்க்கை ஈதாகில்
இழித்தென், எந்தனுக்குய்வகை அருளாய்
    இடைமருதுறை எந்தை பிரானே
(6)
குற்றம் தன்னொடு குணம்பல பெருக்கிக்
    கோல நுண்ணிடையாரொடு மயங்கிக்
கற்றிலேன் கலைகள் பல ஞானம்
    கடியவாயின கொடுமைகள் செய்தேன்
பற்றலாவதோர் பற்று மற்றில்லேன்
    பாவியேன் பல பாவங்கள் செய்தேன்
எற்றுளேன் எனக்குய்வகை அருளாய்
    இடைமருதுறை எந்தை பிரானே
(7)
கொடுக்ககிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்
    குற்றம் செற்றம் இவை முதலாக
விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும்
    வேண்டில் ஐம்புலன் என் வசமல்ல
நடுக்கமுற்றதோர் மூப்பு வந்தெய்த
    நமன் தமர் நரகத்திடல் அஞ்சி
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்
    இடைமருதுறை எந்தை பிரானே
(8)
ஐவகை அரையர் அவர்ஆகி
    ஆட்சி கொண்டொரு கால் அவர் நீங்கார்
அவ்வகைஅவர் வேண்டுவதானால்
    அவரவர் வழியொழுகி நான் வந்து
செய்வகை அறியேன் சிவலோகா
    தீவணா சிவனே எரியாடீ
எவ்வகை எனக்குய்வகை அருளாய்
    இடைமருதுறை எந்தை பிரானே
(9)
ஏழை மானுட இன்பினை நோக்கி
    இளையவர் வலைப்பட்டிருந்து இன்னம்
வாழை தான் பழுக்கும் நமக்கென்று
    வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டுக்
கூழை மாந்தர்தம் செல்கதிப் பக்கம்
    போதமும் பொருள் ஒன்றறியாத
ஏழையேனுக்கோர் உய்வகை அருளாய்
    இடைமருதுறை எந்தை பிரானே
(10)
அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி
    ஐவனம் சுமந்தார்ந்திரு பாலும்
இரைக்கும் காவிரித் தென்கரை தன்மேல்
    இடைமருதுறை எந்தை பிரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
    உள்ளத்தால் உகந்தேத்த வல்லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையுமின்றி
    நாதன் சேவடி நண்ணுவர் தாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page