திருவிடைமருதூர் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருவிடைமருதூர்

(1)
ஓடே கலன், உண்பதும் ஊரிடு பிச்சை
காடே இடமாவது, கல்லால் நிழற்கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து
ஈடா உறைகின்ற இடைமருதீதோ
(2)
தடம் கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடம் கொண்டடியார் குளிர்நீர் சுமந்தாட்டப்
படம் கொண்டதொர் பாம்பரையார்த்த பரமன்
இடம் கொண்டிருந்தான் தன் இடைமருதீதோ
(3)
வெண்கோவணம் கொண்டொரு வெண்தலை ஏந்தி
அங்கோல் வளையாளைஒர் பாகம் அமர்ந்து
பொங்காவரு காவிரிக் கோலக்கரை மேல்
எங்கோன் உறைகின்ற இடைமருதீதோ
(4)
அந்தம் அறியாதவரும், கலமுந்திக்
கந்தம் கமழ் காவிரிக் கோலக்கரை மேல்
வெந்த பொடிப் பூசிய வேத முதல்வன்
எந்தை உறைகின்ற இடைமருதீதோ
(5)
வாசம் கமழ்மா மலர்ச்சோலையில் வண்டே
தேசம் புகுந்தீண்டிஓர் செம்மை உடைத்தாய்ப்
பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய
ஈசன் உறைகின்ற இடைமருதீதோ
(6)
வன்புற்றிள நாகம் அசைத்தழகாக
என்பில்பல மாலையும் பூண்டு எருதேறி
அன்பில் பிரியாதவளோடும் உடனாய்
இன்புற்றிருந்தான் தன் இடைமருதீதோ
(7)
தேக்கும் திமிலும் பலவும் சுமந்துந்திப்
போக்கிப் புறம் பூசலடிப்ப வருமால்
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக்கரை மேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருதீதோ
(8)
பூவார் குழலார் அகில் கொண்டு புகைப்ப
ஓவாதடியார் அடி உள் குளிர்ந்தேத்த
ஆவா அரக்கன் தனை ஆற்றலழித்த
ஏவார் சிலையான் தன் இடைமருதீதோ
(9)
முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
நற்றாமரையானொடு மால் நயந்தேத்தப்
பொற்றோளியும் தானும் பொலிந்தழகாக
எற்றே உறைகின்ற இடைமருதீதோ
(10)
சிறுதேரரும் சில்சமணும் புறங்கூற
நெறியே பல பத்தர்கள் கைதொழுதேத்த
வெறியா வரு காவிரிக் கோலக்கரை மேல்
எறியார் மழுவாளன் இடைமருதீதோ
(11)
கண்ணார் கமழ் காழியுண் ஞானசம்பந்தன்
எண்ணார் புகழ்எந்தை இடைமருதின் மேல்
பண்ணோடு இசைபாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page