திருவிடைமருதூர் – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருவிடைமருதூர்

(1)
விரிதரு புலியுரி விரவிய வரையினர்
திரிதரும் எயிலவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர், இடைமருது அடைவுநல்
புரிதரு மனனவர் புகழ்மிக உளதே
(2)
மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமருதெனும்அவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறும்உடல் பெறுகுவதரிதே
(3)
சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலரென இடுபலி அவர் இடைமருதினை
வலமிட உடல் நலிவிலதுள வினையே
(4)
விடையினர் வெளியதொர் தலைகலன் எனநனி
கடைகடை தொறுபலி இடுகென முடுகுவர்
இடைவிடல் அரியவர், இடைமருதெனும் நகர்
உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே
(5)
உரையரும் உருவினர், உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர், அதன்மிசை
இரைமரும் அரவினர், இடைமருதென உளம்
உரைகளதுடையவர் புகழ்மிக உளதே
(6)
ஒழுகிய புனல்மதி அரவமொடுறை தரும்
அழகிய முடியுடை அடிகளதறைகழல்
எழிலினர் உறைஇடைமருதினை மலர்கொடு
தொழுதல் செய்தெழும்அவர் துயருறல் இலரே
(7)
கலைமலி விரலினர், கடியதொர் மழுவொடும்
நிலையினர், சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடம் இடைமருதே
(8)
செருவடை இலவல செயல்செயத் திறலொடும்
அருவரையினில்ஒரு பதுமுடி நெரிதர
இருவகை விரல்நெறி அவர் இடைமருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே
(9)
அரியொடு மலரவன் எனஇவர் அடிமுடி
தெரிவகை அரியவர்; திருவடி தொழுதெழ
எரிதரும் உருவர்தம் இடைமருதடைவுறல்
புரிதரும் மனனவர் புகழ்மிக உளதே
(10)
குடைமயில் இனதழை மருவிய உருவினர்
உடைமரு துவரினர் பலசொல உறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமருதென மனம் நினைவது எழிலே
(11)
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழில் இடைமருதினைப்
பரவிய ஒருபது பயில வல்லவர்இடர்
விரவிலர் வினையொடு வியனுலகுறவே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page