திருவிடைமருதூர் – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருவிடைமருதூர்

(1)
மருந்தவன், வானவர் தானவர்க்கும்
பெருந்தகை, பிறவினொடு இறவுமானான்
அருந்தவ முனிவரொடு ஆல்நிழல் கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே
(2)
தோற்றவன், கேடவன், துணை முலையாள்
கூற்றவன், கொல்புலித் தோலசைத்த
நீற்றவன், இறைபுனல் நீள்சடை மேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே
(3)
படையுடை மழுவினன், பால் வெண்ணீற்றன்
நடை நவில்ஏற்றினான், ஞாலமெல்லாம்
உடைதலை இடுபலி கொண்டுழல்வான்
இடைமருதினில் உறை எம்இறையே
(4)
பணைமுலை உமையொரு பங்கன், ஒன்னார்
துணைமதிள் மூன்றையும் சுடரில் மூழ்கக்
கணை துரந்தடு, திறல் காலற் செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே
(5)
பொழிலவன் புயலவன், புயல் இயக்கும்
தொழிலவன், துயரவன், துயரகற்றும்
கழலவன், கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே
(6)
நிறையவன், புனலொடு மதியும் வைத்த
பொறையவன், புகழவன், புகழநின்ற
மறையவன், மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடைமருதே
(7)
நனிவளர் மதியொடு நாகம் வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொடமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே
(8)
தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவன், நெடுங்கை மாமத கரியன்று
உரித்தவன், ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே
(9)
பெரியவன், பெண்ணினொடு ஆணும்ஆனான்
வரிஅரவணை மறிகடல் துயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே
(10)
சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள் கொளாதே
அந்தணர் ஓத்தினொடு அரவம்ஓவா
எந்தைதன் வளநகர் இடைமருதே
(11)
இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும் வல்லார்
உலகுறு புகழினொடு ஓங்குவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page