திருவிடைமருதூர் – சம்பந்தர் தேவாரம் (4):

<– திருவிடைமருதூர்

(1)
நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடை மருதிளமுகில் வளம்அமர் பொதுளிய
இடைமருதடைய நம் இடர்கெடல் எளிதே
(2)
மழைநுழை மதியமொடழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரிஅணல் இடம் இடைமருதே
(3)
அருமையன், எளிமையன், அழல்விட மிடறினன்
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன், சிறுமையன், பிணை பெணொடொருமையின்
இருமையும் உடைஅணல் இடம் இடைமருதே
(4)
பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி ஒளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடைஅணல் இடம் இடைமருதே
(5)
வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கும் இடம் இடைமருதே
(6)
கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலனென மழுவினோடு
இலையுடை படையவன் இடம் இடைமருதே
(7)
வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை இசைசெயும் இடைமருது
உளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
குளமணல் உறமூழ்கி வழிபடல் குணமே
(8)
மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடம் இடைமருதே
(9)
மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை அகலமொடிகலினர் இனதெனக்
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
எருதுடை அடிகள்தம் இடம் இடைமருதே
(10)
துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மின், இடுமணல்
கவருறு புனல் இடைமருது கை தொழுதெழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே
(11)
தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை இசைசெய்த
படமலி தமிழிவை பரவ வல்லவர் வினை
கெடமலி புகழொடு கிளரொளியினரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page