(1)
பொங்குநூல் மார்பினீர், பூதப்படையீர், பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர், சாமவேதம் ஓதினீர்
எங்கும்எழிலார் மறையோர்கள் முறையால்ஏத்த இடைமருதில்
மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(2)
நீரார்ந்த செஞ்சடையீர், நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்
போரார்ந்த வெண்மழு ஒன்றுடையீர், பூதம் பாடலீர்
ஏரார்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர், இடைமருதில்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே
(3)
அழல்மல்கும் அங்கையில் ஏந்திப், பூதம் அவைபாடச்
சுழல்மல்கும் ஆடலீர், சுடுகாடல்லால் கருதாதீர்
எழில்மல்கு நான்மறையோர் முறையால்ஏத்த இடைமருதில்
பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே
(4)
பொல்லாப் படுதலை ஒன்றேந்திப் புறங்காட்டு ஆடலீர்
வில்லால் புரமூன்றும் எரித்தீர், விடையார் கொடியினீர்
எல்லாக் கணங்களும் முறையால்ஏத்த இடைமருதில்
செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே
(5)
வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே
(6)
சலமல்கு செஞ்சடையீர், சாந்தநீறு பூசினீர்
வலமல்கு வெண்மழு ஒன்றேந்தி மயானத்தாடலீர்
இலமல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில்
புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே
(7)
புனமல்கு கொன்றையீர், புலியின் அதளீர், பொலிவார்ந்த
சினமல்கு மால் விடையீர், செய்யீர், கரிய கண்டத்தீர்
இனமல்கு நான்மறையோர் ஏத்தும் சீர்கொள் இடைமருதில்
கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே
(8)
சிலையுய்த்த வெங்கணையால் புரமூன்றெரித்தீர், திறல்அரக்கன்
தலைபத்தும் திண்தோளும் நெரித்தீர், தையல் பாகத்தீர்
இலை மொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில்
நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே
(9)
மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர்
கறைமல்கு கண்டத்தீர், கபாலமேந்து கையினீர்
அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில்
நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
(10)
சில்போர்வைச் சாக்கியரும் மாசுசேரும் சமணரும்
துன்பாய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே
இன்பாய அந்தணர்கள்ஏத்தும் ஏர்கொள் இடைமருதில்
அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே
(11)
கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான் நற்றமிழ் ஞானசம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்துபாடல் இவைபத்தும்
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...