திருவிடைமருதூர் – அப்பர் தேவாரம் (2):

<– திருவிடைமருதூர்

(1)
பாசம் ஒன்றிலராய்ப் பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈசனெம் பெருமான் இடைமருதினில்
பூச நாம் புகுதும் புனலாடவே
(2)
மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையினால் முனிகள் வழிபாடு செய்
இறைவன், எம்பெருமான், இடைமருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே
(3)
கொன்றை மாலையும் கூவிள மத்தமும்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்
என்றும் எந்தை பிரான் இடைமருதினை
நன்று கைதொழுவார் வினை நாசமே
(4)
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மையேல் பிறவித் துயர் நீத்திடும்
எம்மையாளும் இடைமருதன் கழல்
செம்மையே தொழுவார் வினை சிந்துமே
(5)
வண்டணைந்தன வன்னியும் கொன்றையும்
கொண்டணிந்த சடைமுடிக் கூத்தனார்
எண்திசைக்கும் இடை மருதா என
விண்டு போயறும் மேலை வினைகளே
(6)
ஏறதேறும் இடைமருது ஈசனார்
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்
ஊறி ஊறி உருகுமென் உள்ளமே
(7)
விண்ணுளாரும் விரும்பப் படுபவர்
மண்ணுளாரும் மதிக்கப் படுபவர்
எண்ணினார் பொழில் சூழிடை மருதினை
நண்ணினாரை நண்ணா வினை நாசமே
(8)
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடும் கருத்தனார்
எந்தையென் இடைமருதினில் ஈசனைச்
சிந்தையால் நினைவார் வினை தேயுமே
(9)
வேதம்ஓதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாட நின்றாடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று
பாதமேத்தப் பறையும் நம் பாவமே
(10)
கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
தனிமுடி கவித்தாளும் அரசினும்
இனியன் தன்அடைந்தார்க்கு இடைமருதனே
(11)
முற்றிலா மதி சூடும் முதல்வனார்
ஒற்றினார் மலையால் அரக்கன்முடி
எற்றினார் கொடியார் இடைமருதினைப்
பற்றினாரைப் பற்றா வினை பாவமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page