திருவிடைமருதூர் – அப்பர் தேவாரம் (1):

<– திருவிடைமருதூர்

(1)
காடுடைச் சுடலை நீற்றர், கையில் வெண்தலையர், தையல்
பாடுடைப் பூதம் சூழப் பரமனார் மருத வைப்பில்
தோடுடைக் கைதையோடு சூழ்கிடங்கதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமலவேலி இடைமருது இடம் கொண்டாரே
(2)
முந்தையார் முந்தியுள்ளார், மூவர்க்கும் முதல்வரானார்
சந்தியார் சந்தியுள்ளார், தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தையுள்ளார், சிவநெறி அனைத்தும் ஆனார்
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம் கொண்டாரே
(3)
காருடைக் கொன்றை மாலை, கதிர்மணி அரவினோடு
நீருடைச் சடையுள் வைத்த நீதியார், நீதியாய
போருடை விடையொன்றேற வல்லவர், பொன்னித் தென்பால்
ஏருடைக் கமலமோங்கும் இடைமருது இடம் கொண்டாரே
(4)
விண்ணினார் விண்ணின் மிக்கார், வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார், பண்ணின் மிக்க பாடலார், பாவம் தீர்க்கும்
கண்ணினார், கண்ணின் மிக்க நுதலினார், காமற் காய்ந்த
எண்ணினார், எண்ணில் மிக்க இடைமருது இடம் கொண்டாரே
(5)
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவியேத்தப்
பூதங்கள் பாடி ஆடல் உடையவன், புனிதன், எந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம் கொண்டாரே
(6)
பொறியரவு அரையில் ஆர்த்துப் பூதங்கள் பலவும் சூழ
முறிதரு வன்னி கொன்றை முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க வைத்தவர், எத்திசையும்
எறிதரு புனல்கொள் வேலி இடைமருது இடம் கொண்டாரே
(7)
படரொளி சடையின் உள்ளால் பாய்புனல் அரவினோடு
சுடரொளி மதியம் வைத்துத் தூவொளி தோன்றும் எந்தை
அடரொளி விடைஒன்றேற வல்லவர், அன்பர் தங்கள்
இடரவை கெடவும் நின்றார் இடைமருது இடம் கொண்டாரே
(8)
கமழ்தரு சடையின் உள்ளால் கடும்புனல் அரவினோடு
தவழ்தரு மதியம் வைத்துத் தன்னடி பலரும்ஏத்த
மழுவது வலங்கை ஏந்தி, மாதொரு பாகமாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம் கொண்டாரே
(9)
பொன்திகழ் கொன்றை மாலை, புதுப்புனல் வன்னி மத்தம்
மின்திகழ் சடையில் வைத்து மேதகத் தோன்றுகின்ற
அன்றவர் அளக்கலாகா அனலெரியாகி நீண்டார்
இன்றுடன் உலகமேத்த இடைமருது இடம் கொண்டாரே
(10)
மலையுடன் விரவி நின்று மதியிலா அரக்கன் ஊக்கத்
தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கிச்
சிலையுடை மலையை வாங்கித் திரிபுரம் மூன்றும் எய்தார்
இலையுடைக் கமலவேலி இடைமருது இடம் கொண்டாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page