(1)
சூலப் படையுடையார் தாமே போலும்
சுடர்த்திங்கள் கண்ணி உடையார் போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்
வேலைக் கடல்நஞ்சம் உண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
(2)
காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலும்
காரானை ஈருரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவப் படுவார் போலும்
பத்துப் பல்லூழி பரந்தார் போலும்
சீரால் வணங்கப்படுவார் போலும்
திசையனைத்துமாய் மற்றும் ஆனார் போலும்
ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
(3)
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்
பூதங்களாய புராணர் போலும்
புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப்படுவார் போலும்
பத்தர்களுக்கின்பம் பயந்தார் போலும்
ஏதங்களான கடிவார் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
(4)
திண்குணத்தார் தேவர் கணங்களேத்தித்
திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
பண்குணத்தார் பாடலோடு ஆடலோவாப்
பரங்குன்றம் மேய பரமர் போலும்
எண்குணத்தார் எண்ணாயிரவர் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
(5)
ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
உயர்பொழில் அண்ணாவில் உறைகின்றாரும்
பாகம் பணி மொழியாள் பாங்கராகிப்
படுவெண் தலையில் பலிகொள்வாரும்
மாகமடை மும்மதிலும் எய்தார் தாமும்
மணிபொழில்சூழ் ஆரூர் உறைகின்றாரும்
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார்
இடைமருது மேவிய ஈசனாரே
(6)
ஐயிரண்டும் ஆறொன்றும் ஆனார் போலும்
அறுமூன்றும் நான்மூன்றும் ஆனார் போலும்
செய்வினைகள் நல்வினைகள் ஆனார் போலும்
திசைஅனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும்
கொய்மலர்அங்கொன்றைச் சடையார் போலும்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையும் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
(7)
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடஞ்சாய்ப்
பிரிவுடைய குணம்பேசில் பத்தோடொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே என்பர்
விரிவிலாக் குணநாட்டத்தாறே என்பர்
தெரிவாய குணம்அஞ்சும் சமிதை அஞ்சும்
பதமஞ்சும் கதியஞ்சும் செப்பினாரும்
எரியாய தாமரைமேல் இயங்கினாரும்
இடைமருது மேவிய ஈசனாரே
(8)
தோலில் பொலிந்த உடையார் போலும்
சுடர்வாய் அரவசைத்த சோதி போலும்
ஆலம் அமுதாக உண்டார் போலும்
அடியார்கட்காரமுதம் ஆனார் போலும்
காலனையும் காய்ந்த கழலார் போலும்
கயிலாயம் தம்இடமாக் கொண்டார் போலும்
ஏலம் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
(9)
பைந்தளிர்க் கொன்றையந்தாரார் போலும்
படைக்கணாள் பாகம் உடையார் போலும்
அந்திவாய் வண்ணத்தழகர் போலும்
அணிநீல கண்டம் உடையார் போலும்
வந்த வரவும் செலவுமாகி
மாறாதென் உள்ளத்திருந்தார் போலும்
எந்தம் இடர்தீர்க்க வல்லார் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
(10)
கொன்றையம் கூவிள மாலை தன்னைக்
குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கையாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி
நெருப்புருவமாய் நின்ற நிமலனாரும்
அன்றவ்வரக்கன் அலறி வீழ
அருவரையைக் காலால் அழுத்தினாரும்
என்றும் இடுபிச்சை ஏற்றுண்பாரும்
இடைமருது மேவிய ஈசனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...