திருவிடைமருதூர் – அப்பர் தேவாரம் (4):

<– திருவிடைமருதூர்

(1)
ஆறு சடைக்கணிவர், அங்கைத் தீயர்
    அழகர், படையுடையர் அம்பொற் தோள்மேல்
நீறு தடவந்து, இடபமேறி
    நித்தம் பலிகொள்வர், மொய்த்த பூதம்
கூறும் குணமுடையர், கோவணத்தர்
    கோடால வேடத்தர், கொள்கை சொல்லின்
ஈறும் நடுவும் முதலும் ஆவார்
    இடைமருது மேவி இடம் கொண்டாரே
(2)
மங்குல் மதி வைப்பர், வான நாடர்
    மடமான் இடமுடையர், மாதராளைப்
பங்கில் மிகவைப்பர், பால்போல் நீற்றர்
    பளிக்கு வடம் புனைவர், பாவ நாசர்
சங்கு திரையுகளும் சாய்க்காடு ஆள்வர்
    சரிதை பலவுடையர், தன்மை சொல்லின்
எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார்
    இடைமருது மேவி இடம் கொண்டாரே
(3)
ஆல நிழலிருப்பர், ஆகாயத்தர்
    அருவரையின் உச்சியர், ஆணர் பெண்ணர்
காலம் பலகழித்தார், கறைசேர் கண்டர்
    கருத்துக்குச் சேயார்தாம் காணாதார்க்குக்
கோலம் பல உடையர், கொல்லையேற்றர்
    கொடு மழுவர், கோழம்பம் மேய ஈசர்
ஏல மண நாறும் ஈங்கோய் நீங்கார்
    இடைமருது மேவி இடம் கொண்டாரே
(4)
தேசர், திறம் நினைவார் சிந்தை சேரும்
    செல்வர், திருவாரூர் என்றும் உள்ளார்
வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
    மருவும் கரிஉரியர், வஞ்சக் கள்வர்
நேசர் அடைந்தார்க்கு, அடையாதார்க்கு
    நிட்டுரவர், கட்டங்கர், நினைவார்க்கென்றும்
ஈசர், புனல் பொன்னித் தீர்த்தர், வாய்த்த
    இடைமருது மேவி இடம் கொண்டாரே
(5)
கரப்பர் கரியமனக் கள்வர்க்கு, உள்ளம்
    கரவாதே தம் நினையகிற்பார் பாவம்
துரப்பர், தொடுகடலின் நஞ்சம் உண்பர்
    தூய மறைமொழியர், தீயால் ஒட்டி
நிரப்பர், புரமூன்றும் நீறு செய்வர்
    நீள்சடையர், பாய்விடை கொண்டெங்கும் ஐயம்
இரப்பர், எமை ஆள்வர், என்னுள் நீங்கார்
    இடைமருது மேவி இடம் கொண்டாரே
(6)
கொடியார் இடபத்தர், கூத்தும்ஆடிக்
    குளிர்கொன்றை மேல் வைப்பர், கோலமார்ந்த
பொடியாரு மேனியர், பூதிப் பையர்
    புலித் தோலர், பொங்கரவர், பூண நூலர்
அடியார் குடியாவர், அந்தணாளர்
    ஆகுதியின் மந்திரத்தார், அமரர் போற்ற
இடியார் களிற்றுரியர், எவரும் போற்ற
    இடைமருது மேவி இடம் கொண்டாரே
(7)
பச்சை நிறமுடையர், பாலர், சாலப்
    பழையர், பிழையெலாம் நீக்கியாள்வர்
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்
    கலனொன்று கையேந்தி இல்லம் தோறும்
பிச்சை கொள நுகர்வர், பெரியர், சாலப்
    பிறங்கு சடைமுடியர், பேணும் தொண்டர்
இச்சை மிக அறிவர், என்றும் உள்ளார்
    இடைமருது மேவி இடம் கொண்டாரே
(8)
காவார் சடைமுடியர், காரோணத்தர்
    கயிலாயம் மன்னினார், பன்னும் இன்சொல்
பாவார் பொருளாளர், வாளார் கண்ணி
    பயிலும் திருவுருவம் பாகம் மேயார்
பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
    புரமூன்றும் ஒள்ளழலாக் காயத் தொட்ட
ஏவார் சிலை மலையர், எங்கும் தாமே
    இடைமருது மேவி இடம் கொண்டாரே
(9)
புரிந்தார் நடத்தின்கண், பூத நாதர்
    பொழிலாரூர் புக்குறைவர், போந்து தம்இல்
பிரிந்தார், அகல்வாய பேயும் தாமும்
    பிரியார் ஒருநாளும், பேணு காட்டில்
எரிந்தார் அனலுகப்பர், ஏழிலோசை
    எவ்விடத்தும் தாமே என்றேத்துவார் பால்
இருந்தார், இமையவர்கள் போற்ற என்றும்
    இடைமருது மேவி இடம் கொண்டாரே
(10)
விட்டிலங்கு மாமழுவர், வேலை நஞ்சர்
    விடங்கர், விரிபுனல்சூழ் வெண்காட்டுள்ளார்
மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
    மழபாடியுள் உறைவர், மாகாளத்தர்
சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை அன்று
    செழுமுடியும் தோள்ஐஞ்ஞான்கு அடரக் காலால்
இட்டிரங்கி மற்று அவனுக்கீந்தார், வென்றி
    இடைமருது மேவி இடம் கொண்டாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page