திருவிசயமங்கை – சம்பந்தர் தேவாரம்:

<– திருவிசயமங்கை

(1)
மருவமர் குழலுமை பங்கர், வார்சடை
அரவமர் கொள்கைஎம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுர புன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே
(2)
கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே
(3)
அக்கரவு அரையினர் அரிவை பாகமாத்
தொக்கநல் விடையுடைச் சோதி தொல்நகர்
தக்கநல் வானவர் தலைவர் நாள்தொறும்
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே
(4)
தொடைமலி இதழியும் துன்னெருக்கொடு
புடைமலி சடைமுடி அடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடிஅணல் விசய மங்கையே
(5)
தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோடு இனிதமர் இடம்
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
வேடமதுடைஅணல் விசய மங்கையே
(6)
மைப்புரை கண்உமை பங்கன், வண்டழல்
ஒப்புரை மேனி, எம்முடையவன் நகர்
அப்பொடு மலர் கொடங்கிறைஞ்சி வானவர்
மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே
(7)
இரும்பொனின் மலைவில்லின் எரிசரத்தினால்
வரும்புரங்களைப் பொடி செய்த மைந்தன்ஊர்
சுரும்பமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடைஅணல் விசய மங்கையே
(8)
உளங்கைய இருபதோடொருபதும் கொடாங்கு
அளந்தரும் வரையெடுத்திடும் அரக்கனைத்
தளர்ந்துடன் எரிதர அடர்த்த தன்மையன்
விளங்கிழையொடும் புகும் விசய மங்கையே
(9)
மண்ணினை உண்டவன், மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்கு அளப்பரிய அத்தனூர்
தண்ணறும் சாந்தமும் பூவு நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே
(10)
கஞ்சியும் கவளமுண் கவணர் கட்டுரை
நஞ்சினும் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே
(11)
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page