திருவிசயமங்கை – அப்பர் தேவாரம்:

<– திருவிசயமங்கை

(1)
குசையும் அங்கையில் கோசமும் கொண்டஅவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையும் தானும் ஒன்றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே
(2)
ஆதி நாதன், அடல்விடை மேலமர்
பூத நாதன், புலியதள் ஆடையன்
வேதநாதன், விசயமங்கை உளான்
பாதம் ஓதவல்லார்க்கில்லை பாவமே
(3)
கொள்ளிடக் கரைக் கோவந்தபுத்தூரில்
வெள்விடைக்கருள் செய் விசயமங்கை
உள்ளிடத்துறைகின்ற உருத்திரன்
கிள்ளிடத் தலைஅற்றது அயனுக்கே
(4)
திசையும் எங்கும் குலுங்கத் திரிபுரம்
அசைய, அங்கெய்திட்டாரழல் ஊட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே
(5)
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள்
கள்ளமாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ளலாக்கி விசயமங்கைப் பிரான்
உள்ளல் நோக்கியென் உள்ளுள் உறையுமே
(6)
கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை
வில்லை ஏற்றுடையான், விசய மங்கைச்
செல்வ போற்றி என்பாருக்குத் தென்திசை
எல்லை எற்றலும் இன்சொலும் ஆகுமே
(7)
கண்பல்உக்க கபாலம் அங்கைக் கொண்டு
உண்பலிக்குழல் உத்தமன், உள்ளொளி
வெண்பிறைக் கண்ணியான், விசயமங்கை
நண்பனைத் தொழப் பெற்றது நன்மையே
(8)
பாண்டுவின் மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்
காண்டலே கருத்தாகி இருப்பனே
(9)
வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங்கைப் பிரான்
சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப்
பந்துவாக்கி உய்யக் கொளும்  காண்மினே
(10)
இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
வலஞ்செய்வார்களும் வாழ்த்திசைப்பார்களும்
நலஞ்செய்வார் அவர் நன்னெறி நாடியே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page