திருவாவடுதுறை – சுந்தரர் தேவாரம் (2):

<– திருவாவடுதுறை

(1)
கங்கை வார் சடையாய், கணநாதா
    கால காலனே, காமனுக்கு அனலே
பொங்கு மாகடல் விடமிடற்றானே
    பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடையாய், தெளி தேனே
    தீர்த்தனே, திருவாவடுதுறையுள்
அங்கணா, எனைஅஞ்சல் என்றருளாய்
    ஆர்எனக்குறவு அமரர்கள் ஏறே
(2)
மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை
    வலிய வந்தெனை ஆண்டு கொண்டானே
கண்ணிலேன்கங்கை உடம்பில் அடு நோயால்
    கருத்தழிந்து உனக்கே பொறையானேன்
தெண்ணிலா எறிக்கும் சடையானே
    தேவனே, திருவாவடுதுறையுள்
அண்ணலே, எனைஅஞ்சல் என்றருளாய்
    ஆர்எனக்குறவு அமரர்கள் ஏறே
(3)
ஒப்பிலா முலையாள் ஒரு பாகா
    உத்தமா, மத்தம்ஆர்தரு சடையாய்
முப்புரங்களைத் தீவளைத்து அங்கே
    மூவருக்கருள் செய்ய வல்லானே
செப்ப ஆல்நிழல்கீழ் இருந்தருளும்
    செல்வனே, திருவாவடுதுறையுள்
அப்பனே, எனைஅஞ்சல் என்றருளாய்
    ஆர்எனக்குறவு அமரர்கள் ஏறே
(4)
கொதியினால் வருகாளி தன் கோபம்
    குறைய ஆடிய கூத்துடையானே
மதியிலேன், உடம்பில் அடு நோயால்
    மயங்கினேன், மணியே மணவாளா
விதியினால் இமையோர் தொழுதேத்தும்
    விகிர்தனே, திருவாவடுதுறையுள்
அதிபனே, எனைஅஞ்சல் என்றருளாய்
    ஆர்எனக்குறவு அமரர்கள் ஏறே
(5)
வந்த வாளரக்கன் வலி தொலைத்து
    வாழும்நாள் கொடுத்தாய், வழி முதலே
வெந்த வெண்பொடிப் பூச வல்லானே
    வேடனாய் விசயற்கருள் புரிந்த
இந்து சேகரனே, இமையோர் சீர்
    ஈசனே, திருவாவடுதுறையுள்
அந்தணா, எனைஅஞ்சல் என்றருளாய்
    ஆர்எனக்குறவு அமரர்கள் ஏறே
(6)
குறைவிலா நிறைவே, குணக் குன்றே
    கூத்தனே, குழைக் காதுடையானே
உறவிலேன் உனையன்றி மற்றடியேன்
    ஒருபிழை பொறுத்தால் இழிவுண்டே
சிறை வண்டார் பொழில்சூழ் திருவாரூர்ச்
    செம்பொனே, திருவாவடுதுறையுள்
அறவனே, எனைஅஞ்சல் என்றருளாய்
    ஆர்எனக்குறவு அமரர்கள் ஏறே
(7)
வெய்ய மாகரி ஈருரியானே
    வேங்கை ஆடையினாய், விதி முதலே
மெய்யனே, அடலாழி அன்று அரிதான்
    வேண்ட நீ கொடுத்தருள் புரி விகிர்தா
செய்ய மேனியனே, திகழொளியே
    செங்கணா, திருவாவடுதுறையுள்
ஐயனே, எனைஅஞ்சல் என்றருளாய்
    ஆர்எனக்குறவு அமரர்கள் ஏறே
(8)
கோதிலா அமுதே, அருள் பெருகு
    கோலமே, இமையோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடையானே
    பசுபதீ பரமா பரமேட்டி
தீதிலா மலையே, திருவருள்சேர்
    சேவகா, திருவாவடுதுறையுள்
ஆதியே, எனைஅஞ்சல் என்றருளாய்
    ஆர்எனக்குறவு அமரர்கள் ஏறே
(9)
வான நாடனே, வழித்துணை மருந்தே
    மாசிலாமணியே, மறைப் பொருளே
ஏனமா எயிறாமையும் எலும்பும்
    ஈடு தாங்கிய மார்புடையானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந்தானே
    தேவனே, திருவாவடுதுறையுள்
ஆனையே, எனைஅஞ்சல் என்றருளாய்
    ஆர்எனக்குறவு அமரர்கள் ஏறே
(10)
வெண்தலைப் பிறை கொன்றையும் அரவும்
    வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடையானை
    ஈசனைத் திருவாவடுதுறையுள்
அண்ட வாணனைச், சிங்கடியப்பன்
    அணுக்க வன்தொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்தமிழ் மலர் பத்தும் வல்லார்கள்
    சாதலும் பிறப்பும் அறுப்பாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page