(1)
மறையவன் ஒரு மாணி வந்தடைய
வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலால்
கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன்
இறைவன் எம்பெருமான் என்றெப்போதும்
ஏத்திஏத்தி நின்றுஅஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக்கன்பொடும் அடைந்தேன்
ஆவடுதுறை ஆதி எம்மானே
(2)
தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்திரப்பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடையாய் அது தன்னைச்
சோழனாக்கிய தொடர்ச்சி கண்டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றிபோற்றி என்றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக்கு அஞ்சி வந்தடைந்தேன்
ஆவடுதுறை ஆதி எம்மானே
(3)
திகழும் மாலவன் ஆயிர மலரால்
ஏத்துவான் ஒரு நீள்மலர் குறையப்
புகழினால் அவன் கண்இடந்திடலும்
புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டடியேன்
திகழு நின் திருப்பாதங்கள் பரவித்
தேவதேவ நின் திறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக்கஞ்சி வந்தடைந்தேன்
ஆவடுதுறை ஆதி எம்மானே
(4)
வீரத்தால் ஒரு வேடுவனாகி
விசைத்தொர் கேழலைத் துரந்து சென்றணைந்து
போரைத் தான் விசயன் தனக்கு அன்பாய்ப்
புரிந்து வாள்படை கொடுத்தல் கண்டடியேன்
வாரத்தால் உன் நாமங்கள் பரவி
வழிபட்டுன் திறமே நினைந்துருகி
ஆர்வத்தோடும் வந்தடியிணை அடைந்தேன்
ஆவடுதுறை ஆதி எம்மானே
(5)
ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுலகாளப்
புகழினால் அருள் ஈந்தமை அறிந்து
மிக்க நின்கழலே தொழுதரற்றி
வேதியா ஆதிமூர்த்திநின் அரையில்
அக்கணிந்த எம்மான் உனையடைந்தேன்
ஆவடுதுறை ஆதி எம்மானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...