(1)
இடரினும் தளரினும் எனது உறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
(2)
வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
(3)
நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
(4)
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நா
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
(5)
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
(6)
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் அடியலால் ஏத்தாது என்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
(7)
வெப்பொடு விரவியோர் வினை வரினும்
அப்பா உன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருஅழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
(8)
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர்பட வரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
(9)
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மலர் அடியலால் உரையாது என்நா
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரிதாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
(10)
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாஉன் அடியலால் அரற்றாது என்நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
(11)
அலைபுனல் ஆவடுதுறைஅமர்ந்த
இலைநுனை வேல்படை எம்இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலை வல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன்ஏறுவர் நிலமிசை நிலையிலரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...