திருவாவடுதுறை – அப்பர் தேவாரம் (4):

<– திருவாவடுதுறை

(1)
நிறைக்க வாலியள் அல்லள் இந்நேரிழை
மறைக்க வாலியள் அல்லள் இம்மாதராள்
பிறைக் கவாலம் பெரும்புனல் !ஆவடு
துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே
(2)
தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்இறை
அளவு கண்டிலள் ஆவடுதண்துறைக்
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே
(3)
பாதிப் பெண்ணொரு பாகத்தன், பன்மறை
ஓதி, என்னுளம் கொண்டவன், ஒண்பொருள்
ஆதி, ஆவடுதண்துறை மேவிய
சோதியே சுடரேஎன்று சொல்லுமே
(4)
கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்திவள்
ஆர்க்கொள் கொன்றையன் ஆவடுதண்துறைத்
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே
(5)
கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்
பருகு பாலமுதே எனும் பண்பினன்
அருகு சென்றிலள் ஆவடு தண்துறை
ஒருவன் என்னை உடையகோ என்னுமே
(6)
குழலும் கொன்றையும் கூவிள மத்தமும்
தழலும் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடுதண்துறையா எனக்
கழலும் கைவளை காரிகையாளுக்கே
(7)
பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
தஞ்சமென் இறுமாந்திவள் ஆரையும்
அஞ்சுவாள் அல்லள் ஆவடு தண்துறை
மஞ்சனோடு இவள்ஆடிய மையலே
(8)
பிறையும் சூடி, நற்பெண்ணோடு ஆணாகிய
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
அறையும் பூம்பொழில் ஆவடு தண்துறை
இறைவன் என்னை உடையவன் என்னுமே
(9)
வையந்தான் அளந்தானும், அயனுமாய்
மெய்யைக் காணலுற்றார்க்கு அழலாயினான்
ஐயன் ஆவடு தண்துறையா எனக்
கையில் வெள்வளையும் கழல்கின்றதே
(10)
பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்
மிக்க வாளரக்கன் வலி வீட்டினான்
அக்கணிந்தவன் ஆவடு தண்துறை
நக்கன்என்னும் இந்நாணிலி காண்மினே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page