திருவாவடுதுறை – அப்பர் தேவாரம் (1):

<– திருவாவடுதுறை

(1)
மாயிரு ஞாலமெல்லாம் மலரடி வணங்கும் போலும்
பாயிரும் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமலவூரர்க்கு அம்பொன்
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே
(2)
மடந்தை பாகத்தர் போலும், மான்மறிக் கையர் போலும்
குடந்தையில் குழகர் போலும், கொல் புலித்தோலர் போலும்
கடைந்த நஞ்சுண்பர் போலும், காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க்கன்பர் போலும் ஆவடுதுறையனாரே
(3)
உற்றநோய் தீர்ப்பர் போலும், உறுதுணை ஆவர் போலும்
செற்றவர் புரங்கள் மூன்றும் தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவியேத்திக் கலந்துலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கன்பர் போலும் ஆவடுதுறையனாரே
(4)
மழுவமர் கையர் போலும், மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும், என்பு கொண்டணிவர் போலும்
தொழுதெழுந்தாடிப் பாடித் தோத்திரம் பலவும் சொல்லி
அழுமவர்க்கன்பர் போலும் ஆவடுதுறையனாரே
(5)
பொடியணி மெய்யர் போலும், பொங்கு வெண்ணூலர் போலும்
கடியதோர் விடையர் போலும், காமனைக் காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும், வேட்கையால் பரவும் தொண்டர்
அடிமையை ஆள்வர் போலும் ஆவடுதுறையனாரே.
(6)
வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும், தானவர் தலைவர் போலும்
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே
(7)
விடைதரு கொடியர் போலும், வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும், பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும், உலகமும் ஆவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே
(8)
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கியேத்த
நந்தி மாகாளர் என்பார் நடுவுடையார்கள் நிற்பச்
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே
(9)
பானமர் ஏனமாகிப் பாரிடந்திட்ட மாலும்
தேனமர்ந்தேறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும்
தீனரைத் தியக்கறுத்த திருவுரு உடையர் போலும்
ஆனரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே
(10)
பார்த்தனுக்கருள்வர் போலும், படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்
கூத்தராய்ப் பாடியாடிக் கொடுவலி அரக்கன் தன்னை
ஆர்த்தவாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page